
இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் தற்சமயத்தில் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற தொடரிலும் தோல்வியை சந்தித்த இந்தியா 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் கோட்டை விட்டது.
அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அடுத்ததாக 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் பயணத்தில் இந்தியா வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் யாருக்கும் சுலபமாக அறிமுக தொப்பியை கொடுக்கக் கூடாது என சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு நாளும் இங்கிலாந்தின் தெருக்களில் சுற்றி திரிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் போடுவதற்கு பதிலாக பயிற்சி போட்டிகளில் விளையாடுங்கள் என்றும் அவர் இந்திய அணியை அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “16 வீரர்களை தேர்ந்தெடுப்பது தேர்வாளர்கள் எந்த ஐடியாவை பின்பற்ற வேண்டும் என்று தெளிவு இல்லாமல் இருப்பதை காண்பிக்கிறது”
“அது நல்ல அறிகுறியும் அல்ல. நிறைய வீரர்களை பிசிசிஐ அனுப்புவதற்கு தயாராக இருக்கிறது என்பதற்காக மட்டும் இந்திய அணியின் தொப்பியை கொடுக்கக்கூடாது. பொதுவாக வெளிநாடுகளில் வலைப்பயிற்சிக்கு தேவையான பவுலர்கள் இருக்க மாட்டார்கள் என்பது ஒரு பிரச்சினை. அதற்காக நீங்கள் அனைவரையும் இங்கிருந்து எடுத்துச் செல்லக்கூடாது. அந்த பவுலர்களுக்கு நீங்கள் பயிற்சி உடைகளை கொடுங்கள். ஆனால் இந்திய தொப்பியை கொடுக்காதீர்கள்”
“அதே போல டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியை பயிற்சி போட்டிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு இங்கிலாந்து சாலைகளில் பயணிக்கக் கூடாது. போதுமான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு அடுத்த போட்டி நடைபெறும் மைதானத்திற்கு ஒரு நாள் முன்பாக மட்டுமே செல்ல வேண்டும். எஞ்சிய நாட்களை பயிற்சிக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: ரோஹித் சர்மாவை தொடர்ந்து சுப்மன் கில்லும் கம்பீரின் பேச்சை கேட்டு எடுத்துள்ள புதிய முடிவு – விவரம் இதோ
“இப்போதெல்லாம் வெளிநாடுகளில் பயிற்சி சம்பந்தமான முடிவுகளை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மட்டுமே எடுக்கிறார்கள். ஆனால் அதை அப்படி தனிநபர்களிடம் விடக்கூடாது. இந்திய கிரிக்கெட்டில் திறமையில் நிறைய ஆழம் இருக்கிறது. அதை இங்கிலாந்தில் நாம் பார்ப்போம் என்று நம்புகிறேன். அந்தத் தொடரில் புதிய இந்திய அணி தயாராக இருக்கிறது என்பதை உலகிற்கு காட்ட வேண்டும்” எனக் கூறினார்.