
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்காக ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளது பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் 150 – 170 தொடர்ச்சியாக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடிக்கத் தடுமாறினார். மறுபுறம் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதிரடியாக விளையாடும் ஸ்டைலைக் கொண்டவர். 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் 2025 சீசனில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஃபைனலுக்கு அழைத்து சென்றார்.
அப்படிப்பட்ட அவருக்கு ரிசர்வ் பட்டியலில் கூட இடம் கிடைக்காதது தான் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. இந்நிலையில் 15 பேரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் சில வீரர்கள் கழற்றி விடப்படுவது தவிர்க்க முடியாதது என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கம்பீர் ஆகியோரை விமர்சிக்காமல் ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் 11 பேர் கொண்ட அணியை போட்டியில் தேர்ந்தெடுக்கலாம். 15 பேர் கொண்ட அணியில் சில நேரங்களில் சிலர் தவறிப் போவார்கள். அதனால் குறிப்பிட்ட வீரர்களைப் பற்றி விவாதிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இது நம்முடைய அணி. அணியை தேர்ந்தெடுப்பதற்கு முன் நாம் அனைவரிடமும் நிறைய கருத்துக்கள் இருக்கும்”
“ஆனால் ஒரு முறை அணியை தேர்ந்தெடுத்து விட்டால், நாம் அதற்கு முழுமையான ஆதரவு கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர் இல்லை, இவர் இல்லை என்று சொல்ல முடியாது. அப்படி சொல்வது சர்ச்சைகளை மட்டுமே உண்டாக்கும். சுப்மன் கில் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் எனக்கு எந்த ஆச்சரியமும் கிடையாது. சில வாரங்களுக்கு முன் 750+ ரன்கள் அடித்த அவரைப் போன்ற நல்ல ஃபார்மில் இருப்பவரை கழற்றி விட முடியாது”
இதையும் படிங்க: அதுக்குன்னு வீட்டுக்கு அனுப்பனுமா? இந்தியா அந்த கோப்பைகளை ஜெய்க்க பும்ரா தேவை.. அகர்கர் விளக்கம்
“இங்கிலாந்து தொடருக்கு முன் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் அவர் நன்றாக விளையாடினார். துணை கேப்டன்ஷிப் பொறுப்பு அவர் வருங்கால டி20 அணியின் கேப்டனாக செயல்படப் போகிறார் என்பதைக் காட்டுகிறது. வருங்காலங்களில் அவர் இந்தியாவின் கேப்டனாக இருக்கப் போகிறார். அதனால் முன்கூட்டியே அவர் பொறுப்பை பெறுவது நல்லதாகும்” என்று கூறினார்.