
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2007 முதல் இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடி வந்த டெஸ்ட் தொடர்கள் பட்டோடி கோப்பை என்றழைக்கப்பட்டு வந்தது. ஜாம்பவான்கள் இப்திகார் அலிகான் பட்டோடி மற்றும் அவருடைய மகன் மன்சூர் அலிகான் பட்டோடி ஆகியோர் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்கள்.
அதை கௌரவிக்கும் வகையில் பட்டோடி கோப்பை என்றழைக்கப்பட்ட அத்தொடரை தற்போது ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை என்ற பெயரில் இங்கிலாந்து வாரியம் மாற்றியுள்ளது. அதனால் மறையவிருந்த பட்டோடி பெயரை எப்படியாவது தொடரில் வைத்திருக்குமாறு சச்சின் டெண்டுல்கர் கேட்டுக்கொண்டார். அதனால் கோப்பையை வெல்லும் அணியின் கேப்டனுக்கு பட்டோடி மெடல் வழங்கப்படும் என்று இங்கிலாந்து வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் எந்த வகையிலும் சச்சின் டெண்டுல்கரை நெருங்க முடியாத ஜேம்ஸ் ஆண்டர்சன் பெயரை கோப்பையின் முதலில் வைத்துள்ள இங்கிலாந்து வாரியத்தை இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார். மேலும் இத்தொடரை டெண்டுல்கர் – ஆண்டர்சன் டிராபி என்றழைக்குமாறு இந்திய ஊடகங்களை கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இத்தொடருக்கு தாங்கள் விரும்பும் பெயரைச் சூட்டுவதற்கான முழு உரிமையும் இங்கிலாந்துக்கு உள்ளது. ஆனால் ஆண்டர்சன் பெயர் முதலாவதாக வந்துள்ளது இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைகிறது. சச்சின் மட்டுமின்றி மகத்தான இந்திய கிரிக்கெட்டர் கபில் தேவ் கூட ஆண்டர்சனுக்கு மிகவும் பெரிய சீனியர். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளிலும் சச்சின் உலகிலேயே மற்ற அனைவர்களை காட்டிலும் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்துள்ளார்”
“டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள ஆண்டர்சன் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை நெருங்கக் கூட முடியாதவர். இது போக டெண்டுல்கர் உலகக்கோப்பை வென்றவர். ஆண்டர்சன் வெல்லாதவர். ஆண்டர்சன் இங்கிலாந்து சூழ்நிலைகளில் மட்டுமே அற்புதமான பவுலர். சொந்த ஊருக்கு வெளியே சச்சின் போல அவருடைய ரெக்கார்ட் சிறப்பாக இல்லை. எனவே அனைத்து வகைகளிலும் சச்சின் பெயர் முதலில் வருவதற்கு தகுதியானவராக இருக்கிறது”
இதையும் படிங்க: தூக்கத்துல கூட செய்வேன்.. குட்டிக் கரணம் அடித்து சதத்தை கொண்டாடுவது ஏன்? ரிஷப் பண்ட் பேட்டி
“அகர வரிசையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் வாதிடலாம். ஆனால் டி (டெண்டுல்கர்) எனும் முதல் எழுத்து மற்றும் ஆண்டர்சனை விட சச்சின் நிறைய சாதனைகளை செய்துள்ளார். இங்கே ஆண்டர்சனை அவமரியாதை செய்யவில்லை. என்னைப் பொறுத்த வரை சச்சின் அவரை விட மேலானவர். எனவே இந்திய ஊடகங்கள் டெண்டுல்கர் – ஆண்டர்சன் கோப்பை என்றழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார். மேலும் பட்டோடி மெடல் ஒவ்வொரு போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வெல்லும் வீரருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது