வீடியோ : சச்சின் உட்பட எங்களால் முடியாததை நீங்க செய்யணும் – கவாஸ்கரின் ஆசையை நிறைவேற்றுவாரா புஜாரா

Pujara
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி பிப்ரவரி 17ஆம் தேதியன்று டெல்லியில் துவங்கியது. அதில் நட்சத்திர சீனியர் வீரர் செடேஸ்வர் புஜாரா தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சாதனை படைத்தார். கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே உரித்தான பாணியில் மிகவும் மெதுவாக விளையாடி ரசிகர்களிடம் புகழ்பெற்றார்.

குறிப்பாக அதிக பந்துகளை எதிர்கொண்டு பவுலர்களை களைப்படையை வைத்து பெரிய ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்று ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதே போல 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்டு முக்கிய ரன்களை மீண்டும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினாலும் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

- Advertisement -

வாழ்த்திய கவாஸ்கர்:
அப்போது கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள அவர் தற்போது 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 12வது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவரை கௌரவிக்கும் வகையில் இரு புறங்களிலும் இந்திய வீரர்கள் நின்று கைதட்டி மைதானத்திற்கு வரவேற்றனர். அதை தொடர்ந்து அவருக்கான சிறப்பு தொப்பியை பரிசளித்து கௌரவித்த முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் வரலாற்றில் இதுவரை தங்களது 100வது போட்டியில் விளையாடிய எந்த இந்திய வீரரும் சதமடிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டினார்.

எனவே தாம் உட்பட சச்சின் டெண்டுல்கர் போன்ற யாராலும் எட்ட முடியாத அந்த கனியை நீங்கள் இந்த ஸ்பெஷலான போட்டியில் எட்ட வேண்டும் என்று வாழ்த்தி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “செட்டேஸ்வர் நாம் குழந்தையாக வளரும் போது வீட்டிலும் தெருக்களிலும் பள்ளிகளிலும் இருக்கும் போது இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவை கொண்டிருப்போம். அந்தக் கனவில் வெற்றி பெற்று நாம் இந்தியாவுக்காக விளையாடுவது நிச்சயமாக நம்ப முடியாத உணர்வை கொடுக்கும்”

- Advertisement -

“அதை நம்முடைய கடின உழைப்பால் மீண்டும் மீண்டும் செய்ய விரும்புவோம். அதற்கு கடினமான நேரங்களில் கடினமாக உழைத்து தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்களுக்கு வேலையில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் எப்போதும் பேட்டை கையிலெடுக்கும் போது களத்தில் மட்டும் விளையாடவில்லை மாறாக இந்திய கொடியை உங்கள் மீது பொருத்தி உங்களது உடல் இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள். நீங்கள் அடிக்கும் ஒவ்வொரு ரன்களும் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகத்தை ஏற்படுத்தும்”

“நீங்கள் தன்னம்பிக்கைக்கும் கடின உழைப்புக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள். உங்களை வாழ்த்தி 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களின் குழுவுக்கு வரவேற்கிறேன். மேலும் நீங்கள் உங்களுடைய 100வது டெஸ்டில் சதமடிக்கும் முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைக்க வேண்டும் என்று நான் விரும்பி வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 263 ரன்களுக்கு அவுட்டானது.

அதையும் படிங்க: எங்கே இருக்கிறோம் என்று தெரியாமலேயே விளையாடிய இளம் வீரர் – கடுப்பாகி அதிரடி அபராதம் போட்ட பாக், நடந்தது என்ன

அதை தொடர்ந்து விளையாடி வரும் இந்தியா முதல் நாள் முடிவில் 21/0 ரன்களுடன் விளையாடி வருகிறது. எனவே 2வது நாளில் பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் புஜாரா சதமடித்து 100 வது போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்து கவாஸ்கரின் ஆசையை நிறைவேற்றி இந்தியாவை வெற்றி பெற வைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement