ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் நடராஜன், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்படாதது விமர்சனங்களை எழுப்பியது. மற்றபடி சிவம் துபே, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட இளமையும் அனுபவமும் கலந்த வீரர்கள் இந்தியாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக அந்த அணியில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக், ஜிதேஷ் சர்மா, இஷான் கிசான், கேஎல் ராகுல் ஆகியோரிடையே போட்டி காணப்பட்டது. அதில் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய நல்ல ஃபார்மில் இருக்கும் ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மற்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளனர்.
கம்பீர் தேர்வு:
இந்த இருவரில் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து டெல்லி அணியின் கேப்டனாக 14 போட்டிகளில் 446 ரன்கள் அடித்து சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். அதே போல ராஜஸ்தான் அணியின் கேப்டனாக 12 போட்டியிலேயே 486 ரன்கள் குவித்துள்ள சஞ்சு சாம்சன் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முக்கிய பங்காற்றினார். அதனால் முதல் முறையாக இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
இருப்பினும் தற்போது இந்த இருவரில் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற கேள்வி காணப்படுகிறது. அது போன்ற சூழ்நிலையில் தம்மைப் பொறுத்த வரை சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு தகுதியானவர் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் விளையாடும் நிலையில் ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் விளையாடுகிறார். இடது கை வீரரான ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் வித்தியாசத்தை கொண்டு வருவார். இந்திய அணியின் சேர்க்கையை பார்க்கும் போது நமக்கு டாப் ஆர்டரை விட மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர் தேவை. ஆனால் 6, 7 ஆகிய இடங்களில் சஞ்சு சாம்சனால் ரன்கள் அடிக்க முடியும் என்று இந்திய அணி கருதினால் அவரை தேர்ந்தெடுக்கலாம்”
இதையும் படிங்க: 250 நிமிடம்.. ரிசர்வ் டே கிடையாது.. இந்தியாவுக்கு 2வது செமி ஃபைனல்.. வெளியான 2024 டி20 உ.கோ ரூல்ஸ்
“அதே சமயம் யார் விளையாடினாலும் அவர்களுக்கு நாம் முழு ஆதரவை கொடுக்க வேண்டும்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் ஏற்கனவே ரிசப் பண்ட் இந்திய அணியில் நிறைய வாய்ப்புகளைப் பெற்றார். மறுபுறம் சஞ்சு சாம்சன் வாய்ப்புக்காக தவம் இருந்தார் என்றே சொல்லலாம். எனவே ஆரம்பத்தில் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கே அதிகப்படியான வாய்ப்புள்ளது. அந்த வாய்ப்பில் அவர் சொதப்பினால் தான் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.