அவரால் மட்டுமே முடியும், வேறு யாராலும் முடியாது ! தோனிக்கு தலை வணங்கிய ஜாம்பவான் கவாஸ்கர்

Sunil Gavaskar Bows Down To MS DHONI
- Advertisement -

மிகுந்த பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 3-வது வாரத்தைக் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் ஒன்றான மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டி நேற்று நவி மும்பையில் கடைசி ஓவர் வரை மிகவும் திரில்லாக நடைபெற்றது. அப்போட்டியில் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கேப்டன் எம்எஸ் தோனி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சென்னைக்கு போட்டியை பினிஷிங் செய்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது இந்திய ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கொண்டாட வைத்துள்ளது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 155/7 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ரோகித் சர்மா இஷான் கிசான் போன்ற தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்த போதிலும் நடுவரிசையில் பொறுப்புடன் பேட்டிங் செய்த இளம் வீரர் திலக் வர்மா 51* ரன்களும் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுத்தனர். சென்னை சார்பில் பந்துவீச்சில் கலக்கிய முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

நிரூபித்த தல தோனி:
அதை தொடர்ந்து 156 என்ற இலக்கை சேசிங் செய்த சென்னைக்கு ருதுராஜ் 0, மிட்செல் சான்ட்னர் 11 போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக ராபின் உத்தப்பா 30 (25) ரன்களும் அம்பத்தி ராயுடு 40 (35) ரன்களும் எடுத்து வெற்றிக்கு போராடி ஆட்டமிழந்தனர். அந்த நிலையில் அடுத்து வந்த சிவம் துபே 13 (14) கேப்டன் ஜடேஜா 3 (8) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் தோல்வியின் பிடியில் சிக்கிய சென்னைக்கு கடைசி நேரத்தில் பிரிட்டோரியஸ் உடன் கைகோர்த்த எம்எஸ் தோனி வெற்றிக்காக போராடினார்.

இதில் 2 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 22 (14) ரன்கள் எடுத்த பிரெடோரியஸ் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அதனால் போட்டியில் மிகபெரிய பரபரப்பு ஏற்பட்டு நிலையில் கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது 6, 4, 2, 4 என அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டு 16 ரன்களை விளாசிய எம்எஸ் தோனி 3 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 28* (13) ரன்களை எடுத்தார். இப்படி அபார பினிஷிங் கொடுத்த எம்எஸ் தோனி 40 வயதைக் கடந்தாலும் தன்னை ஒரு மிகச்சிறந்த என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.

- Advertisement -

தலைவணங்கிய கவாஸ்கர்:
ஒரு கட்டத்தில் தோல்வி உறுதியான நிலையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட தோனியின் ஆட்டத்தை பார்த்த தலை வணங்கிய பலரில் சென்னையின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரவீந்திர ஜடேஜா போட்டி முடிந்த பின் நேரடியாகவே தனது தொப்பியை கழற்றி தோனிக்கு தலைவணங்கினார். அதே வரிசையில் டெஸ்ட் போட்டிகளில் 10000 ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்த இந்தியாவின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் எம்எஸ் தோனிக்கு தலைவணங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் நேற்றைய போட்டி முடிந்த பின் பேசியது பின்வருமாறு. “அதுபோன்ற ஒரு குறிப்பிட்ட அழுத்தம் மிகுந்த சூழ்நிலையில் தோனியால் மட்டுமே அதை (பினிஷிங்) செய்ய முடியும். அதை நம்மால் செய்ய முடியாது என்று அவர் ஒரு நொடி கூட நினைக்கவில்லை. அவர் போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்றது அபாரமானது” என்று கூறியதுடன் தலைவணங்கி பாராட்டினார்.

- Advertisement -

தாம் சாகும்போது 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எம்எஸ் தோனி அடித்த சிக்ஸரை பார்த்துக்கொண்டே இருக்க விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்திருந்த சுனில் கவாஸ்கர் தற்போது மீண்டும் அதுபோன்ற அவரின் ஆட்டத்தைப் பார்த்து தலைவணங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பைக்கு ஏமாற்றம்:
மறுபுறம் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அடுத்தடுத்த 7 போட்டிகளிலும் தொடர் தோல்வியை சந்தித்து வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் 7 போட்டிகளில் தோல்வியை பதிவு செய்த அணி என்ற படுமோசமான சாதனை படைத்துள்ளது. அதுபற்றி சுனில் கவாஸ்கர் பேசியது பின்வருமாறு.

“அவர்கள் (மும்பை) ஒரு சாம்பியன் டீம் ஆகும். அவர்கள் 5 கோப்பையை வென்றுள்ளார்கள். இருப்பினும் இந்த தோல்வி கண்டிப்பாக அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். 7 தொடர் தோல்விகள் என்பதால் கிட்டத்தட்ட அவர்கள் இந்த தொடரில் இருந்து வெளியேறி விட்டார்கள்.

இதையும் படிங்க : தேங்க் யூ பொல்லார்ட் ! வெஸ்ட் இண்டீஸ் சாட்டையடி மன்னனின் பயணமும் சாதனைகளும் – முழுத்தகவல் இதோ

இது போன்ற ஒரு சாதனை படைத்த பின் அடுத்த 7 போட்டிகளில் அவர்களால் என்ன செய்ய முடியும். வேண்டுமானால் அடுத்த 7 போட்டிகளில் வேறு ஒரு உலகில் விளையாடினால்  மட்டுமே உள்ளே வர முடியும். ஆனால் அதற்கும் அவர்களிடையே தன்னம்பிக்கை குறைவாக காணப்படுகிறது” என்று கூறினார்.

Advertisement