
இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. அந்தத் தொடர் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அத்தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியாவுக்காக விளையாட உள்ளார். ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொந்த காரணங்களுக்காக அவர் விளையாடவில்லை. எனவே இத்தொடரில் அவர் சிறப்பாக விளையாடி பெரிய ரன்கள் குவிப்பாரா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் இடது கை ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட் கோலி கொஞ்சம் தடுமாறி வருவதாக முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியன் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். அது போன்ற சூழ்நிலையில் 2024 துலீப் கோப்பையில் விளையாடாமல் நேரடியாக டெஸ்ட் தொடரில் களமிறங்குவதால் வங்கதேச ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட் கோலி தடுமாறக் கூடும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இந்தியாவின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் விராட் கோலி அனுபவத்தால் சிறப்பாக விளையாடி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல உதவுவார் என்றும் பத்ரிநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது நடைபெற்று வரும் துலீப் கோப்பையில் விராட் கோலி ஒரு போட்டியில் விளையாடி வந்தால் நன்றாக இருக்கும்”
“ஏனெனில் வங்கதேசத்திடம் நல்ல ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அவர்களிடம் மூன்றில் ஒரு இடது கை ஸ்பின்னர் இருப்பார்கள். அவர்கள் இந்திய தொடரில் கண்டிப்பாக வருவார்கள். அதனாலேயே விராட் கோலி ஒரு துலீப் கோப்பை விளையாடி வந்தால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் நீங்கள் 100 வலைப்பயிற்சி செய்வது ஓரிரு போட்டிகளில் விளையாடுவதற்கு சமம் என்று நான் கருதுகிறேன்”
இதையும் படிங்க: எட்டி உதைச்சாரு.. கேப்டன் கூல் தோனி எவ்வளவு கோபமானவர் தெரியுமா? 2008 ஐபிஎல் பின்னணியை பகிர்ந்த பத்ரிநாத்
“சமீப காலங்களில் நாம் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறியுள்ளோம். இருப்பினும் சிறந்த வீரரான விராட் கோலி லட்சியங்களுடன் வருவார். இந்தியா அடுத்ததாக பெரிய டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இப்போதும் விராட் கோலி இந்தியாவின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்று நம்புகிறேன். எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற தொடர்களில் இந்தியா சிறப்பாக விளையாட விராட் கோலி சாவியாக இருப்பார்” என்று கூறினார்.