
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 358 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து சுமாராக பவுலிங் செய்த இந்தியாவை சிறப்பாக எதிர்கொண்டு இப்பதிவிடும் போது 400 ரன்களை கடந்து முன்னிலை பெற்று வெற்றியைப் பிரகாசப்படுத்தியுள்ளது
அந்த அணிக்கு துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி 84, பென் டக்கெட் 94 ரன்களை அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். அதே போல ஓலி போப் – ஜோ ரூட் ஆகியோர் ஜோடி சேர்ந்து அரை சதத்தை அடித்து இந்தியாவை கலங்கடித்தனர். ஆனால் அப்போது வரை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை கேப்டன் கில் பவுலிங் செய்ய அழைக்காதது பலரையும் கடுப்பேற்றியது.
ஏனெனில் கடந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவை கம்பேக் கொடுக்க வைத்தார். அப்படிப்பட்ட அவரை இந்தப் போட்டியில் குறைத்து மதிப்பிட்ட கில் 68 ஓவர்கள் வரை பயன்படுத்தவில்லை. அதைப் பார்த்த முன்னாள் ஸ்டுவர்ட் ப்ராட் நேரலையில் கில்லை விமர்சித்தது பின்வருமாறு. “மான்செஸ்டர் மைதானத்தில் அனைவரும் வாஷிங்டன் சுந்தர் எங்கே? அவரை ஏன் நம்மால் பார்க்க முடியவில்லை? என்று பேசுகிறார்கள்”
“இங்கிலாந்து 300/2 என்ற வலுவான துவக்கத்தைப் பெற்ற பின்பும் லார்ட்ஸ் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த ஆஃப் ஸ்பின்னரை நம்மால் பார்க்க முடியவில்லை. இறுதியாக உணவு இடைவெளிக்கு 3 ஓவர்கள் முன்பாக பவுலிங் செய்த சுந்தர் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்தை சிறப்பாக வீசி அவுட் சைட் எட்ஜ்களை உருவாக்கினார்”
“அப்படிப்பட்ட சுந்தரை இன்னும் கொஞ்சம் முன்கூட்டியே சுப்மன் கில் கொண்டு வராத தவறு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கடந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த ஒருவர் உயர்ந்த தன்னம்பிக்கையுடன் இருப்பார். அப்படிப்பட்டவரை நீங்கள் 60 ஓவர்கள் வரை காத்திருக்க செய்துள்ளீர்கள். இது தனிப்பட்ட முறையில் அவரிடம் இருந்து வேகத்தை இழக்க வைக்கும்”
இதையும் படிங்க: 15 பேர் வந்து ஆடிட்டாங்க.. பாவம் இன்னும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கல.. அபிமன்யு ஈஸ்வரனுக்கு – நேர்ந்த சோகம்
“எனவே சுந்தரை அறிமுகப்படுத்துவதில் இந்தியா தாமதம் செய்தது சரி என்று எனக்குத் தெரியவில்லை” எனக் கூறினார். அவர் அப்படி சொல்லி வாயை மூடிய அடுத்த 13வது பந்தில் ஓலி போப்பை 71 ரன்னில் சுந்தர் அவுட்டாக்கினார். அதோடு நிற்காத அவர் ஹாரி ப்ரூக்கையும் 3 ரன்னில் அவுட்டாக்கி கில் தம்மை தாமதமாக பவுலிங் செய்ய வைத்தது தவறு என்பதை நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.