29 வயதான பெங்கால் அணியை சேர்ந்த துவக்க வீரரான அபிமன்யு ஈஸ்வரன் கடந்த 2022-ஆம் ஆண்டு முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் அப்போது நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவருக்கு அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் அந்த தொடரை கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.
அபிமன்யு ஈஸ்வரனுக்கு நேர்ந்த சோகம் :
அதற்கு அடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம்பிடித்து வந்தாலும் இதுவரை அவருக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ள அவருக்கு நிச்சயம் இந்த 5 போட்டிகளில் ஒரு போட்டியிலாவது விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டியில் அவருக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அதனால் அவரது காத்திருப்பு ஜூலை 31-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐந்தாவது போட்டி வரை நீண்டுள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் முதல் முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டதற்கு பிறகு 15 வீரர்கள் அவருக்கு பின்னால் வந்து அறிமுகமான வேளையில் அவர் இன்னும் அறிமுகமாகவில்லை என்கிற சோகமான புள்ளி விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல்தர கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக 103 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 27 சதம் மற்றும் 31 அரைசதம் என 7,841 ரன்கள் குவித்து அசத்தியிருந்தாலும் அவருக்கு இன்றளவும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது ஏமாற்றம் தான். அபிமன்யு ஈஸ்வரனுக்கு பின்னர் இந்திய அணிக்காக கே.எஸ் பரத், சூரியகுமார் யாதவ் ஆகியோர் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்கள். அதன்பின்னர் ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமானார்கள்.
அதேபோன்று முகேஷ் குமார் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற தொடரில் அறிமுகமானார். பின்னர் பிரசித் கிருஷ்ணா தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது அறிமுகமானார். ரஜத் பட்டிதார் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது அறிமுகமானார். சர்பராஸ் கான், துருவ ஜுரேல் ஆகிய இருவரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய மண்ணில் நடைபெற்ற தொடரில் அறிமுகமானவர்கள். ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் ராஞ்சி நகரில் நடைபெற்ற போட்டியின் போது அறிமுகமானார்.
இதையும் படிங்க : இந்திய அணியோட இந்த யோசனை தப்பு.. அதனால் தான் இந்த தடுமாற்றம் – ரிக்கி பாண்டிங் கருத்து
தேவ்தத் படிக்கல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியின் போது அறிமுகமானார். பின்னர் நிதீஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோர் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் அறிமுகமானார்கள். இந்த இங்கிலாந்து தொடரில் கூட சாய் சுதர்சன் மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் அறிமுகமாகி இருக்கிறார்கள். இப்படி அபிமன்யு ஈஸ்வரனுக்கு பின்னால் வந்த 15 வீரர்கள் அறிமுக வாய்ப்பை பெற்றுள்ள வேளையில் இவர் இன்னும் அறிமுக வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய சோகம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



