
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்களை அடித்தும் தோல்வியைப் பரிசளித்த இங்கிலாந்தை 2வது போட்டியில் தோற்கடித்த இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் இங்கிலாந்தை தோற்கடித்த முதல் ஆசிய அணியாகவும் சாதனை படைத்த இந்தியா தொடரை சமன் செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஜூன் 10ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3வது போட்டித் துவங்குகிறது. அந்தப் போட்டியிலும் இங்கிலாந்தை தோற்கடித்து முன்னிலை பெற இந்திய அணி தயாராகி வருகிறது. அப்போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா ஓய்வெடுத்து மீண்டும் வருவது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் சொந்த மண்ணில் படுதோல்வியை பரிசளித்த இந்தியாவை தோற்கடித்து முன்னிலைப் பெற இங்கிலாந்தும் தயாராக உள்ளது.
இந்நிலையில் தற்போதைய இங்கிலாந்து அணியில் தாம் இருந்தால் இந்திய பவுலிங் துறையை நினைத்து கவலைப்படுவேன் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஜஸ்ப்ரித் பும்ரா, ஆகாஷ் தீப் ஆகியோர் லார்ட்ஸ் பிட்ச்சில் இங்கிலாந்துக்கு ஆபத்தைக் கொடுக்கும் பவுலர்களாக செயல்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“ஒருவேளை நான் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையில் இருந்தால் தற்போதைய இந்திய பவுலிங் அட்டாக் எனக்கு கவலையைக் கொடுக்கும். ஏனெனில் லார்ட்ஸ் பிட்ச்சில் இருக்கும் சாய்தள பக்கத்தில் பந்து பட்டால் அது அப்படியே திரும்பி கீழே வரும். அங்கே ஆகாஷ் தீப் பந்துகளை ஸ்டம்பை நோக்கி கொண்டு வருவார். பும்ரா பந்தை தாமதமாக இயக்கி ஆபத்தாக அமைவார்”
“கிறிஸ் ஓக்ஸ் இத்தொடரில் இதுவரை அதிர்ஷ்டமின்மையால் பெரியளவில் வெற்றி காணவில்லை. இருப்பினும் லார்ட்ஸ் மைதானத்தில் அவருடைய ரெக்கார்ட் அற்புதமாக இருக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து நன்றாக விளையாடும். ஆனால் பும்ரா மீண்டும் வந்துள்ளதால் இந்திய அணியின் பவுலிங் அட்டாக் தீவிரமான அச்சுறுத்தலைக் கொடுக்கும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: தோனியிடம் இருக்கும் மிகப்பெரிய ஸ்கில் இதுதான்.. அதை பார்த்து வியந்து போயிருக்கேன் – விராட் கோலி கருத்து
முன்னதாக லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா 2014, 2021 வருடங்களில் தோனி மற்றும் விராட் கோலி தலைமையில் வெற்றி கண்டது. அந்த வகையில் இந்தியாவுக்கு கொஞ்சம் ராசியாகவே இருக்கும் அந்த மைதானத்தில் இம்முறை சுப்மன் கில் தலைமையிலான இளம் படை வெற்றி காணத் தயாராக உள்ளது. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக பும்ரா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.