வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெறும் 2 போட்டியில் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக லண்டனில் நடைபெற்ற முடிந்த 2023 பெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்ததால் அதிரடியான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஜாரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஜெய்ஸ்வால், ருதுராஜ் கைக்வாட், நவ்தீப் சைனி, முகேஷ் குமார் ஆகிய இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அதற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கான் மீண்டும் கண்டுகொள்ளப்படாதது அனைவரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பழமை வாய்ந்த இந்தியாவின் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதிமுறையாக இருந்து வருகிறது. ஆனால் இப்போதெல்லாம் ரஞ்சி கோப்பையில் அசத்தும் வீரர்களை கண்டுகொள்ளாத தேர்வுக்குழு ஐபிஎல் தொடரில் ஓரிரு வருடங்கள் அசத்தும் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து செய்து வருகிறது.
விளாசிய கவாஸ்கர்:
அதற்கு மீண்டும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக 2022 – 23 ரஞ்சி கோப்பையில் 566 ரன்களை 92.66 என்ற அபாரமான சராசரியில் எடுத்த சர்பராஸ் கான் ஒட்டுமொத்தமாக 37 போட்டிகளில் 3505 ரன்களை 79.65 என்ற சிறப்பான சராசரியில் எடுத்து தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் முரட்டுத்தனமாக செயல்பட்டும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். மறுபுறம் யசஸ்வி ஜெய்ஸ்வால் 81 என்ற சராசரியிலும் ருதுராஜ் 42 என்ற சராசரியிலும் ரஞ்சிக்கோப்பையில் ரன்களை குவித்துள்ளனர்.
ஆனால் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் சர்ப்ராஸ் சுமாரான செயல்பட்ட நிலையில் அந்த இருவருமே மிகச் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் டெஸ்ட் அணிக்கு தேர்வாகியுள்ளனர். எனவே இங்கு யாரும் ஜெய்ஸ்வால், ருதுராஜ் தேர்வுக்கு எதிராக இல்லாத போதிலும் அவர்களை விட ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட்டும் சர்ப்ராஸ் கான் புறக்கணிக்கப்படுவதையே விமர்சிக்கின்றனர். இருப்பினும் கவாஸ்கர், சச்சின், விராட் கோலி உட்பட அனைத்து ஜாம்பவான்களும் ரஞ்சி கோப்பையில் தான் கண்டெடுக்கப்பட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
அதனால் பழமை மிகுந்த ரஞ்சிக் கோப்பை குப்பையில் தூக்கி எறிந்து விட்டு இனிமேல் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் அசத்தும் வீரர்களை இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்ந்தெடுங்கள் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் சர்பார்ஸ் கான் மீண்டும் புறக்கணிக்கப்பட்டதால் ரஞ்சிக்கோப்பையை பேசாமல் நிறுத்தி விடுங்கள் என முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 3 ரஞ்சிக் கோப்பை தொடர்களில் சர்பராஸ் கான் 100க்கு மேற்பட்ட சராசரியில் ரன்களை குவித்து வருகிறார். அதனால் இந்தியாவுக்கு தேர்வாக அவர் இன்னும் என்ன செய்ய வேண்டும்? அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கொடுக்காமல் இருங்கள். ஆனால் அவரை குறைந்தபட்சம் இந்திய அணியில் தேர்ந்தெடுத்து ரஞ்சிக் கோப்பையில் வெளிப்படுத்திய செயல்பாடுகளுக்கு மரியாதை கொடுங்கள். இல்லையென்றால் ரஞ்சி கோப்பையை முற்றிலுமாக நிறுத்தி விடுங்கள்”
“குறிப்பாக ரஞ்சி கோப்பையால் எந்த பயனும் இல்லை என்றும் டெஸ்ட் அணிக்கு தேர்வாக நீங்கள் ஐபிஎல் தொடரில் அசத்தினால் போதுமானது என்றும் வெளிப்படையாக சொல்லுங்கள்” என்று கூறினார். அதே போல வருங்காலத்தை கருத்தில் கொண்டு துணை கேப்டனாக இளம் வீரரை நியமிக்காமல் ரகானேவை அறிவித்தது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அந்த இடத்தில் இருந்திருக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் முன்னேறி வரும் அக்சர் பட்டேல் துணை கேப்டனாக நாம் நியமித்திருக்கலாம்”
இதையும் படிங்க:IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி ஏன் இடம்பெறவில்லை தெரியுமா? – விவரம் இதோ
“அந்த இருவருமே அந்த இடத்திற்கு சரியானவர்கள். ரகானே துணை கேப்டனாக இருப்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் நீங்கள் இந்த இடத்தில் ஒரு இளம் வீரரை வருங்கால கேப்டனாக வளர்க்கும் வாய்ப்பை நழுவி விட்டுள்ளீர்கள். இளம் வீரர்களிடம் நாங்கள் வருங்கால கேப்டனை தேடுகிறோம் என்று சொல்லுங்கள். அப்போது தான் அவர்களும் தங்களை கேப்டனாக நினைத்து வளர்வார்கள்” என்று கூறினார்.