
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள். அதைத்தொடர்ந்து இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. அந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இளம் இந்திய அணிக்கு சுப்மன் கில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு கலவையான விமர்சனங்கள் எடுத்துள்ளன. ஏனெனில் 2021 காபா டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்த கில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் அதைத் தவிர்த்து வெளிநாட்டு மண்ணில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் வெறும் 25 சராசரியைக் கொண்டுள்ளார்.
அது போக ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சில வருடங்கள் செயல்பட்டுள்ள அவர் உள்ளூரில் ரஞ்சிக்கோப்பை போன்ற டெஸ்ட் தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை. அதனால் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே கில் தகுதியற்றவர் என்று ஸ்ரீகாந்த், சேவாக் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அப்படிப்பட்ட அவரிடம் கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்டுள்ளதை அனைவரும் வரவேற்கவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன்ஷிப் பொறுப்புக்கு சுப்மன் கில் தகுதியானவர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். அவரிடம் கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி பாதுகாப்பான கைகளில் இருப்பதாக ஸ்டீவ் வாக் கூறியுள்ளார். இருப்பினும் ஆரம்பத்தில் தோற்றாலும் அதற்காக கவலைப்படாமல் சுப்மன் கில்லுக்கு நீண்ட வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே கேப்டனாக வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ஸ்டீவ் வாக் பேசியது பின்வருமாறு. “இந்திய அணி நல்ல கைகளில் இருக்கிறது. சுப்மன் கில் சிறப்பான பிளேயர். அழுத்தத்தின் கீழ் நன்றாக செயல்படக் கூடியவர். நன்றாக சிந்திக்கக்கூடியவர். தன்னுடைய அணி வீரர்களால் மதிக்கப்படும் அவர் கேப்டன்ஷிப் பொறுப்புக்கு நல்ல சாய்ஸ். ஆனால் இந்த வேலையில் அவர் வளர்வதற்கு நீங்கள் போதுமான நேரத்தை வழங்க வேண்டும்”
இதையும் படிங்க: சச்சினோட கம்பேர் பண்ணாதீங்க.. நம்ப முடியாத சூர்யவன்சி இதை செய்ய முடியுமா தெரியல? ஸ்டீவ் வாக் பாராட்டு
“ஏனெனில் 1.4 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட நாட்டின் அணியை தலைமைத் தாங்குவது மிகவும் அழுத்தமான வேலை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் துவங்குகிறது. அந்தத் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் அங்கமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.