IND vs AUS : இதையும் சேத்து 5 தோல்வியாச்சு.. மழை வேற.. என்ன செய்ய போறோம்னு தெரியல.. 2023 உ.கோ முன் ஆஸி கேப்டன் ஸ்மித் கவலை

Steve Smith 2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற நிலையில் 2வது போட்டியிலும் 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. செப்டம்பர் 24 ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற அத்தொடரின் 2வது போட்டியில் டாஸ் வென்ற அந்த அணி சுமாராக பந்து வீசியதால் அடித்து நொறுக்கிய இந்தியா 50 ஓவரில் 399/5 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக சுப்மன் கில் 104, ஸ்ரேயாஸ் ஐயர் 105, கேஎல் ராகுல் 52, சூரியகுமார் யாதவ் 72* ரன்கள் எடுக்க சுமாராக செயல்பட்ட ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 2 விக்கெட் எடுத்தார். அதை தொடர்ந்து 400 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு பிரசித் கிருஷ்ணா வேகத்தில் மேத்தியூ ஷார்ட் 9, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

5 தொடர் தோல்விகள்:
அப்போது மழை வந்ததால் 33 ஓவரில் 317 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கை மீண்டும் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு அஸ்வின் சுழலில் வார்னர் 53, லபுஸ்ஷேன் 27, ஜோஸ் இங்லிஷ் 6 ரன்களில் அவுட்டானது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும் அலெக்ஸ் கேரி 14, கேமரூன் கிரீன் 19 ரன்கள் அவுட்டானதால் கடைசியில் சீன் அபௌட் 54 ரன்கள் எடுத்தும் 28.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா 217 ரன்கள் எடுத்து தோற்றது.

அந்தளவுக்கு பந்து வீச்சிலும் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்களை எடுத்தனர். இந்நிலையில் இப்போட்டியில் மழை வந்த பின் பிட்ச் சுழலுக்கு மாறியதால் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். அதை விட கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி 3 போட்டிகளில் தோற்ற தங்களுடைய அணி தற்போது இத்தொடரிலும் 2 அடுத்தடுத்த தோல்விகளை 2023 உலகக் கோப்பைக்கு முன் சந்தித்துள்ளது கவலையளிப்பதாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்போட்டிக்காக மைதானத்திற்கு வந்த போது பிட்ச் நன்றாகவே இருந்தது. இருப்பினும் இந்திய அணிக்கு பாராட்டுக்கள். குறிப்பாக கில் மற்றும் ஸ்ரேயாஸ் சிறப்பாக பேட்டிங் செய்து போட்டியை எங்களிடமிருந்து எடுத்துச் சென்று விட்டனர். அதை விட ராகுல் மற்றும் சூர்யா அபாரமாக பேட்டிங் செய்தனர். மேலும் மழை பெய்த பின் பிட்ச் சுழலுக்கு சாதகமாக மாறத் துவங்கியது”

இதையும் படிங்க: IND vs AUS : இந்த ஒரு சம்பவம் நடந்தப்பவே நாம ஜெயிச்சிடுவோம்னு எனக்கு தெரியும் – கே.எல் ராகுல் பேட்டி

“கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து இங்கேயும் நாங்கள் தொடர்ச்சியான சில (5) போட்டிகளில் தோற்றுள்ளோம். எனவே அதற்கான காரணத்தை கண்டறிந்து அடுத்த போட்டி நாங்கள் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என்று நம்புகிறேன். தற்போது 2 நாட்கள் இடைவெளி இருப்பதால் அதில் உலக கோப்பைக்கும் சேர்த்து நாங்கள் வேலை செய்ய இருக்கிறோம். எனவே கடைசி போட்டியில் நாங்கள் வெற்றியை எங்கள் பக்கம் திருப்புவோம் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement