WTC Final : அப்டினா இந்தியா தோல்வி கன்ஃபார்ம் – அடித்து நொறுக்கும் ஆஸி, வரலாறு படைத்த ஹெட் – ஸ்மித், சாதனை புள்ளிவிவரம் இதோ

- Advertisement -

இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதியன்று 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி துவங்கியது. உலக கிரிக்கெட்டின் 2வது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் அந்த போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் படைத்த ஆஸ்திரேலியா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவை எதிர்கொண்டது. அந்த நிலைமையில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா மேகமூட்டத்துடன் கூடிய வானிலையை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இருப்பினும் அதற்காக தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஷ்வினை அவர் கழற்றி விட்டது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

அதை தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலியாவுக்கு முகமது சிராஜ் வேகத்தில் ஆரம்பத்திலேயே தடுமாறிய உஸ்மான் கவாஜா டக் அவுட்டாகி சென்றார். இருப்பினும் அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேனுடன் இணைந்த மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்து அதிரடியாக விளையாடினாலும் 8 பவுண்டரியுடன் 43 ரன்களில் ஷார்துல் தாக்கூரிடம் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே லபுஸ்ஷேன் 26 ரன்களில் ஷமியின் வேகத்தில் கிளீன் போல்ட்டானதால் 76/3 என ஆஸ்திரேலியா தடுமாறியது.

- Advertisement -

தோல்வி கன்ஃபார்ம்:
அப்போது மகிழ்ச்சியாக இருந்த இந்திய ரசிகர்களுக்கு அடுத்ததாக களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு விரைவாக ரன்களை சேர்த்து மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தினார். மறுபுறம் அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் தமக்கே உரித்தான பாணியில் நங்கூரமாக நின்று இந்திய பவுலர்களை திணறடிக்கும் வகையில் பேட்டிங் செய்து மெதுவாக ரன்களை சேர்த்தார். அதே ஸ்டைலில் நேரம் செல்ல செல்ல ஒருபுறம் நிதானம் மறுபுறம் அதிரடியாக ஜோடி சேர்ந்து இந்தியாவை பிரித்து மேய்ந்த அவர்கள் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் பெரிய தொல்லையை கொடுத்தனர்.

அதன் வாயிலாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடரின் ஃபைனலில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி என்ற மாபெரும் சாதனையும் அவர்கள் படைத்தனர். இதற்கு முன் கடந்த 2021 ஃபைனலில் இதே இந்தியாவுக்கு எதிராக வென்ற நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் – கேன் வில்லியம்சன் ஆகியோர் 96* ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். அப்படி சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த டிராவிஸ் ஹெட் 100 ரன்களை கடந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஃபைனலில் சதமடித்த முதல் வீரர் என்ற மிகப்பெரிய வரலாறு படைத்தார்.

- Advertisement -

குறிப்பாக 1975இல் துவங்கப்பட்ட உலகக் கோப்பை வரலாற்றின் முதல் ஃபைனலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் க்ளைவ் லாய்ட் சதமடித்தது கோப்பையை வென்றதைப் போல் இப்போட்டியில் சதமடித்துள்ள அவர் இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே 8 சதங்களை அடித்துள்ளார். ஆச்சரியப்படும் வகையில் தங்களுடைய சொந்த மண்ணில் அடித்த அந்த 8 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி வாகை சூடியுள்ளது. அதனால் இந்த போட்டியில் இந்தியா தோல்வி பெறுவது உறுதியென இந்திய ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க:இதனால தான் நாங்க அஷ்வினை சேக்கல. டாசுக்கு பின்னர் ரோஹித் சர்மா – அளித்த சாக்கு போக்கு என்ன தெரியுமா

ஏனெனில் அதோடு நிற்காதே அந்த ஜோடி நேரம் செல்ல செல்ல மேலும் நங்கூரமாக நின்று இந்திய பவுலர்கள் விழி பிதுங்கும் அளவுக்கு அசால்டாக ரன்களை சேர்த்தனர். அதனால் முதல் நாள் முடிவில் 327/3 ரன்களை எடுத்துள்ள ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்வதற்கு தேவையான வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.

களத்தில் 4வது விக்கெட்டுக்கு 251* ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியாவின் ஃபைனல் கனவை மீண்டும் உடைக்கும் வகையில் பேட்டிங் செய்து வரும் டிராவிஸ் ஹெட் 146* (156) ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் சதத்தை நெருங்கி 95* (227) ரன்கள் எடுத்துள்ளனர்.

Advertisement