
கடந்த மார்ச் 28-ஆம் தேதி இந்தியாவில் துவங்கி நடைபெற்று வரும் 19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதல் ஏழு ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் 6 புள்ளிகளை பெற்று தற்போதைய நிலையில் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக இனிவரும் போட்டிகள் சென்னை அணிக்கு மிக முக்கியமான போட்டிகளாக மாறியுள்ளன.
இனிவரும் போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். இந்நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களது எட்டாவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட காத்திருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி.எஸ்.கே அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் சென்னை அணியின் பின்னடைவுக்கு மிக முக்கியமான காரணமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் மோசமான பேட்டிங் பார்ம் பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்த அளவுக்கு இந்த தொடரில் சிறப்பாக செயல்படாத அவர் மீது விமர்சனமும் இருந்து வரும் வேளையில் அவரை ஆதரித்து சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : எம்.எஸ் தோனி காயத்திலிருந்து மீண்டு பயிற்சி எடுத்து வருவதால் விரைவில் களத்திற்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோன்று ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலாக மாற்று வீரரையும் பார்த்து வருகிறோம். தற்போதைய நிலையில் உர்வில் பட்டேல் அணியில் உள்ளதால் மாற்று வீரரை உடனடியாக வாங்க எந்த ஒரு அவசரமும் இல்லை.
இதையும் படிங்க : என்னையா போன மேட்ச் அவுட் ஆக்குன.. முதல் ஓவரிலேயே பழிதீர்த்த வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் திறமை மீது எங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. வெளியே அவர் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் இருக்கின்றது என்பது எங்களுக்கும் தெரியும் இருந்தாலும் அணிக்குள் அவருக்கு நல்ல ஆதரவு இருப்பதால் நிச்சயம் அவரது பேட்டில் இருந்து ரன்கள் வரும் என்கிற நம்பிக்கையும் உள்ளது என ஸ்டீபன் பிளமிங் கூறியது குறிப்பிடத்தக்கது.