என்னய்யா சொல்றீங்க.. அப்டின்னா 2023 உ.கோ இந்தியாவுக்கு இல்ல நியூஸிலாந்துக்கா? முக்கிய புள்ளிவிவரம்

IND vs NZ
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் துவங்கியது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடத்தப்படும் இந்த தொடர் 1987, 1996, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறுவது ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாக பொதுவாகவே வெளிநாடுகளில் தடுமாறினாலும் கூட சொந்த மண்ணில் கில்லியாக செயல்படக்கூடிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் காணப்படுகிறது. அந்த நிலைமையில் நேற்று துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்து அமர்க்களமான துவக்கத்தை பெற்றது.

- Advertisement -

ஆச்சர்யமான புள்ளிவிவரம்:
அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 282 ரன்களை துரத்தி நியூசிலாந்துக்கு 2வது விக்கெட்டுக்கு 273 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்த டேவோன் கான்வே 152* (121) ரன்களும் ரச்சின் ரவீந்திரா 123* (96) ரன்களும் எடுத்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முதல் சதத்தை ரிக்கி பாண்டிங் அடித்த நிலையில் இறுதியாக ஆஸ்திரேலியா தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டம் வென்றது.

அதே போல் 2011 உலகக்கோப்பையில் முதல் சதத்தை வங்கதேசத்துக்கு எதிராக வீரேந்திர சேவாக் அடித்த நிலையில் கடைசியில் 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை முத்தமிட்டு சரித்திரம் படைத்தது. அதன் தொடர்ச்சியாக 2015 உலகக் கோப்பையில் முதல் சதத்தை ஆரோன் பின்ச் அடித்த நிலையில் இறுதியாக ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

மீண்டும் அதே போல 2019 உலகக் கோப்பையில் முதல் சதத்தை ஜோ ரூட் அடித்த நிலையில் கடைசியில் இங்கிலாந்து முதல் முறையாக சொந்த மண்ணில் கோப்பையை வென்றது. அந்த வரிசையில் நியூசிலாந்தின் டேவோன் கான்வே இந்த உலகக்கோப்பையின் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். இந்த புள்ளிவிவரத்தை பார்க்கும் இந்திய ரசிகர்கள் அப்படின்னா கோப்பை நியூசிலாந்துக்கு என்ற கவலையை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: நம்பர் ஒன்னுன்னு நீங்க தான் மெச்சுக்கணும்.. பாகிஸ்தான் பற்றி நேரலையில் வாசிம் அக்ரமுக்கு.. மிஸ்பா பதிலடி

அத்துடன் 2015, 2019 ஆகிய உலகக் கோப்பைகளில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியா களமிறங்கியும் நாக் அவுட்டில் தோல்வியை சந்தித்தது. அதே போல சமீபத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா தற்போது தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இத்தொடரில் களமிறங்குவதும் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. இருப்பினும் 2011, 2015, 2019இல் சொந்த மண்ணில் விளையாடிய அணிகள் கோப்பையை வென்றது போல் இம்முறையும் இந்தியா சாதிக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

Advertisement