1996 உலக சாம்பியனின் பரிதாப நிலை.. ஜிம்பாப்வேயை முந்தி இலங்கை மோசமான உலக சாதனை

Sri Lanka
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பான தருணங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 30ஆம் தேதி புனே நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாராக விளையாடி 49.3 ஓவரில் வெறும் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பாதி வெற்றியை கோட்டை விட்டது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக நிசாங்கா 46, கேப்டன் குசால் மெண்டிஸ் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பரூக்கி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 242 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் ரஹமனுல்லா, குர்பாஸ் டக் அவுட்டானாலும் இப்ராகிம் ஜாட்ரன் 39, ரஹீல் ஷா 62, கேப்டன் ஷாகிதி 58*, உமர்சாய் 73* ரன்கள் எடுத்து மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

மோசமான உலக சாதனை:
அதனால் 45.2 ஓவரிலேயே இலக்கை எட்டி ஆப்கானிஸ்தான் எளிதான வெற்றி பெற்றதால் இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. மேலும் ஏற்கனவே இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற முன்னாள் சாம்பியன்களை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் தற்போது இலங்கையையும் தோற்கடித்து 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

மறுபுறம் 6 போட்டிகளில் 4வது தோல்வியை பதிவு செய்த இலங்கை புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு சரிந்துள்ளது. அதனால் செமி ஃபைனல் வாய்ப்பு 90% கேள்விக்குறியாகியுள்ளது இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. முன்னதாக 1996 உலகக்கோப்பையை வென்ற இலங்கை சங்கக்காரா, மலிங்கா போன்ற ஜாம்பவான்களின் ஓய்வுக்கு பின் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் சமீப காலங்களாகவே தடுமாறி வருகிறது.

- Advertisement -

இருப்பினும் கடந்த வருடம் சனாகா தலைமையில் கொதித்து எழுந்த அந்த அணி 2022 ஆசிய கோப்பையை வென்று அசத்தியது. அதனால் அந்நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த போதிலும் சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் படுதோல்வியை சந்தித்த இலங்கைக்கு இத்தொடரில் சனாக்கா, வணிந்து ஹஸரங்கா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெளிநாடு மாதிரி இருக்கு.. எங்களோட தோல்விக்கு இந்தியாவின் சூழ்நிலை தான் காரணம்.. பாக் கோச் வித்யாச பேட்டி

ஆனாலும் நிலைமையை சமாளிக்க வேண்டிய எஞ்சிய வீரர்களும் சுமாராக செயல்பட்டதால் இப்போட்டியையும் சேர்த்து உலகக் கோப்பையில் இலங்கை 43வது தோல்வியை பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக தோல்விகளை பதிவு செய்த அணி என்ற ஜிம்பாப்பேவின் சாதனையை தகர்த்துள்ள இலங்கை மோசமான உலக சாதனை படைத்துள்ளது. அந்தப் பட்டியல்:
1. இலங்கை : 43*
2. ஜிம்பாப்வே : 42
3. இங்கிலாந்து : 37
4. பாகிஸ்தான் : 36
5.நியூசிலாந்து/வெஸ்ட் இண்டீஸ் : தலா 35

Advertisement