தெ.ஆ அணியை மிஞ்சி ஆசிய அளவில் இலங்கை புதிய சரித்திர சாதனை – எதிரணியை நொறுக்குவதில் தனித்துவமான உலக சாதனை

SL vs BAN Sri Lanka 2
Advertisement

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் இலங்கை சூப்பர் 4 சுற்றில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. கொழும்புவில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை முடிந்தளவுக்கு போராடி 50 ஓவர்களில் 257/9 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சமர விக்ரமா 93 ரன்களும் குஷால் மெண்டிஸ் 50 ரன்களும் எடுத்தனர்.

வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக தஸ்கின் அஹமத், ஹசன் முகமத் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 258 ரன்களை துரத்திய வங்கதேசம் ஆரம்ப முதலே சிறப்பாக பந்து வீசிய இலங்கை பவுலர்களிடம் நேர்த்தியாக விளையாட முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 48.1 ஓவரில் 236 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு லிட்டன் டாஸ் 3, கேப்டன் சாகிப் 3, முஸ்பிகர் ரஹீம் 29 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அதிகபட்சமாக தவ்ஹீத் ஹ்ரிடாய் போராடி 82 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

தனித்துவ உலக சாதனை:
அந்தளவுக்கு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்திய இலங்கை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் தசுன் சனாக்கா, மஹீஸ் தீக்சனா, மதிசா பதிரனா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். முன்னதாக 1996 உலகக் கோப்பையை வென்று உலகின் டாப் அணியாக எதிரணிகளை பந்தாடிய இலங்கை சமீப காலங்களாகவே தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தடுமாறி வந்தது.

இருப்பினும் தசுன் சனாகா தலைமையில் இளம் வீரர்களுடன் கடந்த வருடம் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை தோற்கடித்த இலங்கை மறுமலர்ச்சி வெற்றியை பெற்று ஆசிய சாம்பியனாக சாதனை படைத்தது. அந்த வகையில் சமீப காலங்களாகவே நல்ல வெற்றிகளை பெற்று வரும் அந்த அணி கடைசியாக களமிறங்கிய 13 ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காமல் தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் வென்ற 2வது அணி என்ற தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தானின் சாதனையை உடைத்துள்ள இலங்கை ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அதிக வெற்றிகளை பதிவு செய்த ஆசிய அணி என்ற வரலாற்றையும் படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. ஆஸ்திரேலியா : 21 (ஜனவரி 11 2003 – மே 24 2003)
2. இலங்கை : 13* (ஜனவரி 4 2023 – செப்டம்பர் 9 2023)
3. தென்னாபிரிக்கா : 12 (பிப்ரவரி 13 2005 – அக்டோபர் 30, 2005)
4. பாகிஸ்தான் : 12 (நவம்பர் 18 2007 – ஜூன் 8 2008)
5. தென்னாபிரிக்கா : 12 (செப்டம்பர் 25 2016 – பிப்ரவரி 19 2017)

இதையும் படிங்க: நடப்பு சாம்பியன்னா சும்மாவா, இலங்கை அசத்தல் வெற்றி – ஆசிய கோப்பையிலிருந்து வங்கதேசம் வெளியேறியதா?

இதில் ஆச்சரியப்படும் அம்சம் என்னவெனில் அந்த 13 போட்டிகளிலும் எதிரணிகளின் 10 விக்கெட்டுகளையும் சாய்த்த இலங்கை ஆல் அவுட் செய்துள்ளது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் எதிரணிகளை ஆல் அவுட்டாக்கிய அணி என்ற தனித்துவமான உலக சாதனையும் இலங்கை படைத்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 10 முறை ஆல் அவுட் செய்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement