ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் இரண்டாவது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே ராஜஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கியது.
தொடர்ந்து பட்டாசாக விளையாடிய ஹைதராபாத் 20 ஓவரில் 286-6 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. அதிகபட்சமாக ஹைதராபாத் அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே இஷான் கிசான் சதத்தை அடித்து 106* (47) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து அடித்து நொறுக்கிய டிராவிஸ் ஹெட் 67 (31), ஹென்றிச் க்ளாஸென் 34 (14), நிதிஷ் ரெட்டி 30 (15) ரன்கள் எடுத்தனர்.
ஹைதெராபாத் அசத்தல்:
மறுபுறம் மோசமாக பவுலிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே, 3 தீக்சனா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்ததாக களம் இறங்கிய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 1, கேப்டன் ரியான் பராக் 4 ரன்னில் சிம்மர்ஜித் வேகத்தில் அவுட்டானார்கள். அடுத்து வந்த நிதீஷ் ராணா 11 ரன்னில் அவுட்டானதால் 50/3 என ராஜஸ்தான் தடுமாறியது.
இருப்பினும் மறுபுறம் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரேல் தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டினார். அந்த வகையில் மூன்றாவது விக்கெட்டுக்கு 11 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் சாம்சன் அரை சதத்தை அடித்து 66 (37) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் இணைந்து விளையாடிய ஜுரேல் 70 (35) ரன்கள் எடுத்து பெவிலியன் சென்றார்.
உலக சாதனையுடன் வெற்றி:
அவர்களுக்கு அடுத்தபடியாக சிம்ரோன் ஹெட்மயர் முடிந்தளவுக்கு அதிரடியாக போராடி 42 (23), சுபம் துபே 34* (11) ரன்கள் எடுத்தனர். ஆனாலும் 20 ஓவரில் 242-6 ரன்களை மட்டுமே எடுத்த ராஜஸ்தான் தோற்றது. 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இத்தொடரை வெற்றிகரமாக துவக்கிய ஹைதராபாத்துக்கு அதிகபட்சமாக சிமர்ஜித் 2, ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுக்களை எடுத்தனர்.
இதையும் படிங்க: அஷ்வின் ரிட்டர்ன்.. பதிரானா இல்லை.. மும்பை அணிக்கெதிரான டாஸிற்கு பிறகு பேசிய – ருதுராஜ் கெய்க்வாட்
முன்னதாக இந்தப் போட்டியையும் சேர்த்து ஹைதராபாத் ஐபிஎல் தொடரில் 4 முறை 250க்கும் மேற்பட்ட ரன்களை (287/3, 286/6, 277/3, 266/7) குவித்துள்ளது. இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 250 ரன்கள் அடித்த அணி என்ற உலக சாதனையை ஹைதராபாத் படைத்துள்ளது. இதற்கு முன் இந்திய அணி மற்றும் இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே அணி தலா 3 முறை 250+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.



