ஆஸ்திரேலியாவில் 2025/26 ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பை வென்றது. 4வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 15 வருடங்கள் 16 தொடர் தோல்விகளுக்கு பின் ஒரு வழியாக ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்று நிம்மதி பெருமூச்சு விட்டது.
இருப்பினும் அந்தப் போட்டி வெறும் 2 நாட்களுக்குள் முடிந்தது சர்ச்சையை உண்டாக்கியது. ஏனெனில் கடந்த காலங்களில் இந்தியாவில் 2 – 3 நாட்களுக்குள் முடிந்த டெஸ்ட் போட்டிகளை இதே ஆஸ்திரேலியா, இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக சொந்த மண்ணில் குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்காக இந்தியா சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைப்பதாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்தினர் விமர்சித்தார்கள்.
பிட்ச்சில் தப்பில்ல:
அப்படிப்பட்ட நிலையில் இத்தொடரில் பெர்த், மெல்போர்ன் மைதானங்களில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகள் வெறும் 2 நாட்களில் முடிந்தது. அதைப்பற்றி மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன், மான்டி பனேசர் ஆகிய இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அதே சமயம் இந்தியாவை சேர்ந்த ஆகாஷ் சோப்ரா, சுனில் கவாஸ்கர் ஆகிய முன்னாள் வீரர்களும் விமர்சித்தனர்.
ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர்கள் யாரும் இதுவரை தங்கள் நாட்டில் அமைக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான பிட்ச்களை விமர்சனம் செய்யவில்லை. இந்நிலையில் மெல்போர்ன் பிட்ச் பற்றி தாம் செய்யப்போவதில்லை என்று இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்தியாவின் பிட்ச்கள் மோசம் என்று சொல்லக்கூடிய ஆஸ்திரேலியர்களின் இரட்டை நிலைப்பாடு மட்டமானது என்று அவர் விமர்சித்துள்ளார்.
டபுள் ஆக்சன் தப்பு:
இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “எடுத்துக்காட்டாக கொல்கத்தா போட்டி எப்படி முடிந்தது என்ற எடுத்துக்காட்டை நாம் எடுத்துக் கொள்வோம். கிரிக்கெட்டில் நிறைய வருடங்கள் விளையாடிய நாம் அந்த பிட்ச் மோசமாக இருந்ததாக நமக்கு நாமே விமர்சித்தோம். ஆனால் மற்ற நாட்டவர்கள் அதை செய்வதில்லை. அவர்கள் அவர்களை உயர்வாகவும் நம்மை தாழ்வாகவும் பேசுகிறார்கள். ஆஸ்திரேலியா ஷேன் வார்னே, நாதன் லயன் ஆகியோரை உருவாக்கியது”
இதையும் படிங்க: வெறும் 7 ரன்ஸ் 8 விக்கெட்ஸ்.. வரலாற்றில் நிகழாத 2 உலக சாதனை படைத்த பூட்டான் வீரர்
“ஆனால் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இன்னும் ஒரு கிரேட் ஸ்பின்னரை கூட உருவாக்கவில்லை. வெளிநாட்டு சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் மாற்றிக் கொள்வதே டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகாகும். எனவே மெல்போர்ன் பிட்ச்சை நான் விமர்சிக்க போவதில்லை. ஏனெனில் அது இரு அணிக்கும் பொதுவாக இருந்தது. அங்கே நடைபெற்ற போட்டியைப் பார்ப்பது தில்லர் திரைப்படம் போல வேடிக்கையாக இருந்தது. ஆனால் அவர்களுடைய இரட்டை நிலைப்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.



