ரோகித்தை ஓய்வு பெற சொன்னவர்களுக்கு… ரவி சாஸ்திரியின் அதிரடி பதில்

Rohit Sharma
- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் ஒருநாள் போட்டியே, ரோகித் சர்மா இந்திய அணிக்காக விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கலாம் என்ற தகவல்கள் போட்டிக்கு முன்பாக பரவலாக பேசப்பட்டன. ஆனால் அந்தப் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக 138 ரன்கள் குவித்து சதம் விளாசியதன் மூலம், அவரது ஓய்வு குறித்த அனைத்து விவாதங்களுக்கும் தற்காலிகமாக அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில், தி ஹண்ட்ரெட் 2026 தொடரின் தொடக்கப் போட்டியான எம்ஐ லண்டன் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தை லண்டனில் உள்ள கியா ஓவல் மைதானத்தில் ரோகித் சர்மா நேரில் கண்டு ரசித்தார்.

- Advertisement -

அப்போது போட்டிக்கு வர்ணனை செய்த முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.

“விமர்சகர்களுக்கு பேட்டால் கொடுத்த அறை”

ரவி சாஸ்திரி கூறுகையில், “ஹிட்மேன் இங்கே இருக்கிறார். லார்ட்ஸ் போட்டிக்கு முன்பு அவரது எதிர்காலம் குறித்து பலரும் பலவிதமாக பேசினர். ஆனால் அவர் தனது பேட்டால் மிகச் சரியான பதிலை கொடுத்தார். அது விமர்சகர்களின் கன்னத்தில் விழுந்த அறை போல இருந்தது. 138 ரன்கள்… லார்ட்ஸ் மைதானத்தில் அவர் அடித்த முதல் சதம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் அவர். இதுபோன்ற தருணங்களை அவர் ஏராளமாக பார்த்திருக்கிறார்” என்று புகழாரம் சூட்டினார்.

- Advertisement -

ரோகித், விராட்டை யாராலும் எதுவும் செய்ய முடியாது – அஸ்வின்

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியான கருத்தை முன்வைத்துள்ளார்.

அவர் தனது யூடியூப் சேனலில் பேசியபோது, “விளையாட வேண்டும் என்று அவர்கள் விரும்பும் வரை ரோகித் சர்மாவையோ, விராட் கோலியையோ தேர்வுக்குழு அல்லது அணி நிர்வாகம் எளிதாக நீக்க முடியாது. ரோகித் கிட்டத்தட்ட 12 ஆயிரம் ரன்கள் எடுத்துள்ளார். அவருடைய சாதனைகள் அதற்கு காரணம். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விளையாடுவதைப் பார்க்கவே மக்கள் மைதானத்திற்கு வருகிறார்கள். அவர்களை நீக்குவது பெரிய சர்ச்சையை உருவாக்கும்” என்று கூறினார்.

ரோகித்தின் இலக்கு உலகக் கோப்பை

ரோகித் சர்மா குறித்து மேலும் பேசிய அஸ்வின், “அவர் தற்போது இருக்கும் நிலையும், பேட்டிங் செய்யும் விதத்தையும் பார்த்தால் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. இத்தனை ஆண்டுகளாக அவர் என்ன செய்ய முடியும் என்பதை உலகம் பார்த்துவிட்டது. அவரது ஒரே நோக்கம் அடுத்த ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அவர் இவ்வளவு தீவிரமாக விளையாடி வருகிறார். இது விமர்சகர்களுக்கு பதில் அளிப்பதற்காக அல்ல; தனது கனவை நிறைவேற்றுவதற்காக” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement