இந்தியாவில் விஜய் ஹசாரே கோப்பை 2025 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ஆம் தேதி பல்வேறு மைதானங்களில் துவங்கியது. அந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா தங்களது மாநில அணிகளுக்காக முதல் 2 போட்டிகளில் விளையாடினார்கள். அதனால் அவர்கள் விளையாடும் போட்டிகளைப் பார்க்க ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியது.
அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடிய ரோஹித் சர்மா சிக்கிமுக்கு எதிரான முதல் போட்டியில் சதமடித்து 155 ரன்கள் விளாசி மும்பை எளிதாக வெற்றி பெற உதவினார். அதையும் சேர்த்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக முறை 150+ ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் ரோஹித் சர்மா சமன் செய்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தலா 9 முறை 150+ ரன்கள் அடித்துள்ளார்கள்.
சம்பளம் எவ்வளவு:
மறுபுறம் ஆந்திராவுக்கு எதிராக 299 ரன்களை சேசிங்கில் சதமடித்த விராட் கோலி 131 ரன்களை குவித்து டெல்லி வெற்றி பெற உதவினர். அடுத்ததாக உத்தரகாண்டிற்கு எதிரான போட்டியில் மும்பைக்காக விளையாடிய ரோஹித் சர்மா டக் அவுட்டானார். இருப்பினும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் அசத்திய விராட் கோலி 77 ரன்களை குவித்து டெல்லி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.
இந்நிலையில் சர்வதேச மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடி பல கோடி ரூபாய்களை சம்பாதித்துள்ள விராட் கோலி, ரோஹித் சர்மா அவ்விருப் போட்டிகளில் விளையாடியதற்காக பெற உள்ள சம்பள விவரங்களை பார்ப்போம். இந்தியாவில் தற்போது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு 3 விதமாக சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதன் படி 40 லிஸ்ட் ஏ போட்டிகளுக்கு மேல் விளையாடிய வீரர்களுக்கு 60000 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.
கூடுதலாக ஆட்டநாயகன் பரிசு:
21 – 40 போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு 50000 ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதற்கு குறைவான போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு 40000 ரூபாய் சம்பளமாக தரப்படுகிறது. அதன் படி விராட் கோலி, ரோஹித் சர்மா 40க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். அதனால் 2 போட்டிகளில் விளையாடிய அவர்களுக்கு 60000 ரூபாய் வீதம் தலா ஒரு லட்சத்து 20000 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: 2 நாளில் ஆஸி தோற்க இதான் காரணம்.. அடுத்த மேட்ச்ல அதை கட் பண்ணனும்.. ஸ்மித் அதிருப்தி பேட்டி
அது மட்டுமின்றி சிக்கிம், குஜராத்துராத்துக்கு எதிரான போட்டிகளில் அவர்கள் தலா 1 ஆட்டநாயகன் விருதையும் வென்றார்கள். அதற்கு பரிசாக அவர்களுக்கு தலா 10000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பல வருடங்கள் கழித்து விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடிய விராட், ரோஹித் தங்களுடைய தரத்தை நிரூபித்து 2027 உலகக் கோப்பைக்கு முன் கழற்றி விட நினைப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து விடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



