ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரில் முதல் 3 போட்டிகளில் இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடர்ந்து 15வது வருடமாக சொந்த மண்ணில் கோப்பையை வென்றது. இருப்பினும் 4வது போட்டியில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து ஒயிட்வாஸ் தோல்வியைத் தவிர்த்தது. அத்துடன் 15 வருடங்கள் 16 தொடர் தோல்விகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று இங்கிலாந்து நிம்மதி பெருமூச்சு விட்டது.
டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டி வெறும் 2 நாட்களுக்குள் முடிந்தது. குறிப்பாக முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் விழுந்தது. அதன் வாயிலாக 21ஆம் நூற்றாண்டில் மெல்போர்ன் மைதானத்தில் முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் விழுந்த போட்டி என்ற பெயரையும் அப்போட்டி பெற்றது. அந்தளவுக்கு மெல்போர்ன் பிட்ச் வேகத்துக்கு சாதகமாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் திண்டாடினார்கள்.
ஆஸ்திரேலியா தோல்வி:
இந்நிலையில் மெல்போர்ன் பிட்ச்சில் அதிகப்படியான பச்சை புற்கள் விடப்பட்டிருந்தது வேகப்பந்து வீச்சுக்கு அதீத சாதகமானதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். அதுவே நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் தங்களுடைய தோல்விக்கு வித்திட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே அடுத்தப் போட்டியில் மைதானப் பராமரிப்பாளர் புற்களின் அளவை வெட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இல்லையெனில் போட்டி 2 நாட்களுக்குள் முடிந்து விடும் என்று அதிருப்தியை வெளிப்படுத்தும் ஸ்மித் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது மிகவும் வேகமான போட்டியாக அமைந்தது. நாங்கள் 2 இன்னிங்ஸிலும் இன்னும் 50 – 60 ரன்கள் அதிகம் அடித்திருந்தால் வெற்றியின் பக்கம் இருந்திருப்போம். இங்கிலாந்து அதிரடியாக விளையாட வந்து பந்தை மிருதுவாக்கினார்கள்”
ஸ்மித் அதிருப்தி:
“பிட்ச் நியாயமான அளவுக்கு போட்டி முழுவதும் சாதகமாக இருந்தது. இங்கிலாந்தின் டாப் ஆர்டர் அதிரடி காட்டியதால் பந்து மிருதுவானது. எப்படியிருந்தாலும் பிட்ச் பவுலர்களுக்கு அதிக சாதகமாக இருந்தது. 2 நாட்களில் நீங்கள் 36 விக்கெட்டுகள் பார்ப்பது அளவுக்கு அதிகமானது. மைதான பராமரிப்பாளர் விரும்பியதை விட அதிகம் செய்துள்ளார்கள்”
இதையும் படிங்க: இன்னும் ஒரு விக்கெட் எடுத்தா போதும் ஒருநாள் போட்டிகளில் ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்தவுள்ள சாதனை – விவரம் இதோ
“ஒருவேளை நாங்கள் அதை 8 மில்லி மீட்டர் அளவுக்கு குறைத்தால் அது இன்னும் நன்றாக இருக்கும்” என்று கூறினார். மொத்தத்தில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்மித் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஒரு ஆஷஸ் போட்டியில் தோல்வியைச் சந்தித்தார். இதைத் தொடர்ந்து கடைசிப் போட்டி 2026 புத்தாண்டில் ஜனவரி 4ஆம் தேதி சிட்னியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



