ஐசிசி உலக கோப்பை 2023 : லட்சிய கனவை இந்திய மண்ணில் சாதிக்குமா.. தென்னாப்ரிக்க அணியின் முழுமையான அலசல்

South Africa 2
- Advertisement -

வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் ஐசிசி 2023 உலகக் கோப்பை தொடரை சொந்த மண்ணில் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அதற்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் சவாலை கொடுக்கும் என நம்பப்படுகிறது. அந்த வரிசையில் இந்தியா மட்டுமின்றி உலகின் அனைத்து கிரிக்கெட் அணிகளுக்கும் சவாலை கொடுக்கும் ஒரு அணியாக தென்னாப்பிரிக்கா திகழ்கிறது என்றே சொல்லலாம்.

இருப்பினும் கிரிக்கெட்டில் என்ன தான் திறமை இருந்தாலும் வெற்றி காண்பதற்கு லேசான அதிர்ஷ்டமும் தேவைப்படும் என்று சொல்வார்கள். ஆனால் அது ஒன்று மட்டுமே திறமையுடைய தென்னாப்பிரிக்காவுக்கு காலம் காலமாக ஏமாற்றத்தை கொடுத்து வருவதால் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. ஒருவேளை அதிர்ஷ்டமே கை கொடுத்தாலும் முக்கிய நேரத்தில் சொதப்பி வெற்றியை எதிரணிக்கு தாரை வார்க்கும் தென்னாப்பிரிக்காவை சோக்கர் என்றும் வல்லுனர்கள் அழைப்பார்கள்.

- Advertisement -

தென்னாபிரிக்க அணி:
எடுத்துக்காட்டாக 1992 உலகக் கோப்பையில் முக்கிய போட்டியில் மழை வந்து 1 பந்துக்கு 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற அதிர்ஷ்டமற்ற நிலையால் தென்னாப்பிரிக்கா வெற்றியைக் கோட்டை விட்டது. அதே போல 1999 உலகக்கோப்பை செமி ஃபைனலில் ஸ்டீவ் வாக் கேட்ச்சை ஹெர்சல் கிப்ஸ் விட்டதும் க்ளுஸ்னர் போராட்டத்தை ஆலன் டொனால்ட் சரியாக சிங்கிள் எடுக்காமல் வீணடித்ததும் எதிரணிக்கு தாரை வார்த்தது. இருப்பினும் தவறுகளை திருத்திக் கொண்டு இம்முறை களமிறங்கும் அந்த அணிக்கு அன்றிச் நோர்ட்ஜே காயத்தால் விலகியுள்ளது பெரிய பின்னடைவாகும்.

இருப்பினும் அந்த குறை தெரியாமல் எதிரணிகளை மிரட்டும் அளவுக்கு காகிஸோ ரபாடா, லுங்கி நிகிடி, மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்சி ஆகிய அனுபவமும் இளமையும் கலந்த வீரர்களால் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு கூட்டணி வலுவாகவே இருக்கிறது. அதே போல தப்ரிஸ் சம்சி, கேசவ் மகாராஜ் ஆகிய முதன்மை ஸ்பின்னர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்கும் அளவுக்கு திறமையானவர்களாக கருதப்படுகின்றனர்

- Advertisement -

மறுபுறம் பேட்டிங் துறையை பார்க்கும் போது குயிண்டன் டீ காக், ஹென்றிச் க்ளாஸென், ரீசா ஹென்றிக்ஸ், ஐடன் மார்க்ரம் ஆகியோர் வலுப்படுத்தும் நிலையில் ஃபினிஷராக டேவிட் மில்லர் எதிரணிகளைப் பந்தாட தயாராக இருக்கிறார். அதில் க்ளாஸென் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் மார்க்ரம் தேவைப்படும் போது சுழல் பந்துகளை வீசுவார் என்பது அந்த அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

அதே சமயம் கேப்டன் தெம்பா பவுமா தொடர்ந்து பெரிய ரன்களை குவிப்பதில் தடுமாற கூடியவராக இருக்கிறார். அதே போல ஹர்டிக் பாண்டியா, மிட்சேல் மார்ஷ் போல வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக சேர்க்கப்பட்டுள்ள ஆண்டிலோ பெலுக்வியோ தரமாகவும் ஃபார்மிலும் இல்லாதது அந்த அணியில் உள்ள முக்கிய குறையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் மில்லர், டீ காக், ரபாடா போன்ற பெரும்பாலான தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய சூழ்நிலைகளை நன்கு இருந்திருப்பது மறைமுகமான சாதகமாகும்.

இதையும் படிங்க: வேணும்னா அந்த பதவி கிடைக்கும்.. ஆனா 2023 உ.கோ இந்திய அணியில் அஷ்வினுக்கு சான்ஸ் கிடைக்காது.. ஆரோன் பின்ச் ஓப்பன்டாக்

மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும் அதிர்ஷ்டத்தின் உதவி இருக்கும் பட்சத்தில் அதை நிறையாக்கி தங்களுடைய லட்சிய கனவு உலக கோப்பையை இந்திய மண்ணில் முத்தமிடுவதற்கான தரமும் தகுதியும் தென்னாபிரிக்க அணியில் இருக்கிறது என்பதே க்ரிக்தமிழ் இணையத்தின் அலசலாகும். ஆனால் அதற்கு நாக் அவுட் போன்ற முக்கியமான போட்டிகளில் அந்த அணி பழைய பஞ்சாங்க சொதப்பல்களை அரங்கேற்றக்கூடாது என்பது நிதர்சனமாகும்.

Advertisement