
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது. இத்தனைக்கும் கடந்த நியூசிலாந்து தொடரில் சொந்த மண்ணில் இந்தியா தோல்வியைச் சந்திப்பதற்கு சுழலுக்கு சாதகமான பிட்ச்களே முக்கிய காரணமாக அமைந்தது.
இருப்பினும் அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் அதே போன்ற பிட்ச்சை கொல்கத்தாவில் அமைத்து அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது. ஏனெனில் தாங்கள் தான் அப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென்று கேட்டதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். அதனால் கோபமடைந்த பெரும்பாலான இந்திய ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கௌதம் கம்பீர் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்.
ஏனென்றால் 2014 – 2021 வரை சொந்த மண்ணில் இந்தியா வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தோற்றது. ஆனால் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தது முதல் சொந்த மண்ணில் இந்தியா 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு கௌதம் கம்பீர் தவறாக எதுவும் செய்து விடவில்லை என்று ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இந்தியா வெற்றிப் பாதைக்கு திரும்ப தோல்வியிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு இனிமேலாவது நல்ல பிட்ச்களை அமைக்க வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பெங்கால் வாரியத்தின் தலைவராக இருந்தாலும் நான் கொல்கத்தாவில் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்கப்பட்டதில் ஈடுபடவில்லை. பிசிசிஐ கியூரேட்டர்கள் கொல்கத்தாவுக்கு 4 நாட்கள் முன்பாகவே வந்து பிட்ச்சை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டனர்”
“எங்கள் குயூரேட்டர் சுஜன் முகர்ஜி இந்திய அணி கேட்ட மாற்றங்களை மட்டுமே செய்தார். ஆனால் அந்த பிட்ச் சிறந்ததாக இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஈடன் கார்டன்ஸ் மைதானம் 3 நாட்களும் முழுமையாக நிரம்பியிருந்ததால் நீங்கள் இன்னும் நல்ல பிட்ச்சில் விளையாடத் தகுதியானவர்கள். இனிமேல் கௌதம் கம்பீர் மற்றும் இந்திய அணி கொல்கத்தாவில் விளையாடியதை விட நல்ல பிட்ச்களில் விளையாட வேண்டும் என்று நான் நம்புகிறேன்”
இதையும் படிங்க: இந்தியான்னா மட்டும் இளிச்சவாயா? லண்டன், சிட்னியில் கொத்தாக விழுந்தப்போ எங்க போனீங்க.. கவாஸ்கர் பதிலடி
“சில நேரங்களில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரின் கோரிக்கைக்கேற்ப நாங்கள் பிட்ச்களை அமைக்கிறோம். தற்சமயத்தில் கௌதம் கம்பீரை பதவி நீக்கம் செய்வது பற்றி எந்த கேள்வியும் இல்லை. ஏனெனில் அவரும் சுப்மன் கில்லும் இங்கிலாந்தில் நல்ல பேட்டிங் பிட்ச்களில் சிறப்பாக செயல்பட்டார்கள். அதே போல அவர்கள் விரைவில் இந்திய மண்ணிலும் அசத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.