
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சிறிய வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தாலும் இந்திய அணியின் போராட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது ஒரு கட்டத்தில் 112 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த வேளையில் இறுதி நேரத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருடன் இணைந்து விளையாடிய ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 181 பந்துகளை சந்தித்து 61 ரன்களை குவித்து அசத்தியிருந்தார்.
அவரது இந்த அற்புதமான இன்னிங்ஸ் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது .அதிலும் குறிப்பாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரை வைத்துக்கொண்டு ஜடேஜா இறுதிவரை போராடியது அனைவரையும் வியக்க வைத்திருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் இந்த சிறப்பான போராட்டம் குறித்தும், ஜடேஜாவின் செயல்பாடு குறித்தும் பேசியுள்ள முன்னாள் கேப்டனான கங்குலி கூறியதாவது :
ஜடேஜா உண்மையிலேயே இந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடியிருந்தார். இனியும் அவர் இந்திய அணிக்காக இதேபோன்று தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். கடந்த பல ஆண்டுகளாகவே ஜடேஜா இந்திய அணிக்கு ஒரு முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்திய அணிக்காக அவர் 80-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளிலும், 200-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
அவருடைய பேட்டிங், பவுலிங் மட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் மிகச் சிறப்பான செயல்பாடு இன்றளவும் தொடர்ந்து வருகிறது. அதனால் நான் அவரை இந்திய அணியின் ஸ்பெஷல் பிளேயராக பார்க்கிறேன். கடந்த சில ஆண்டுகளாகவே அவரின் பேட்டிங் ஃபார்ம் அதிகரித்துள்ளது. அதனால் தான் நான் அவரை ஸ்பெஷல் பிளேயராக பார்க்கிறேன்.
இதையும் படிங்க : ரெஸ்ட் எல்லாம் ஒன்னும் வேணாம்.. பும்ரா 4 ஆவது போட்டியில் ஆடனும்.. காரணத்தை கூறிய – அணில் கும்ப்ளே
அவருடைய இடம் இந்திய அணிக்கு மிகவும் அவசியம் அவர் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம் என சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அவர்கூறியது போன்றே இந்த தொடரில் அற்புதமான பார்மில் விளையாடி வரும் ஜடேஜா தொடர்ந்து நான்கு அரைசதங்களை அடித்து தனது அசத்தலான பார்மை இந்த தொடரில் வெளிகாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.