சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்துள்ள முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் பலமான முன்னிலையை பெற்றுள்ளது.
பும்ரா அடுத்த போட்டியில் விளையாட வேண்டும் : அணில் கும்ப்ளே
அதற்கடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை பெற்றுள்ள வேளையில் அடுத்ததாக நடைபெறவுள்ள நான்காவது போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
அந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும். அப்படி இந்திய அணி நான்காவது போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அந்த போட்டியில் விளையாடுவது அவசியம். ஆனால் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டதால் கடைசி இரண்டு போட்டியில் அவர் எந்த போட்டியில் விளையாடுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் கடைசி இரண்டு போட்டிகளிலுமே அவர் விளையாடினால் மட்டுமே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு உறுதியாகும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அணில் கும்ப்ளே தான் தேர்வுக்குழுவில் ஒரு முக்கிய நிர்வாகியாக இருந்திருந்தால் நிச்சயம் பும்ராவை அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வைக்க முடிவு செய்வேன் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணிக்கு நான்காவது போட்டி மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. ஏனெனில் நான்காவது போட்டியில் ஒருவேளை நாம் தோற்கும் பட்சத்தில் இந்த தொடரை நாம் இழந்து விடுவோம். எனவே என்னை பொறுத்தவரை நான்காவது போட்டியில் பும்ரா விளையாடியாக வேண்டும். அதுமட்டும் இன்றி கடைசி போட்டியிலும் அவரை நான் விளையாட வைத்திருப்பேன் என்று அணில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்திய நாட்டை நினைச்சா உடம்பு வலி வருமா? அந்த 2 இங்கிலாந்து பவுலர்களை பாத்து பும்ரா விளையாடனும்.. பதான்
ஆனால் ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து பேசியிருந்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் : பும்ராவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு மூன்று போட்டிகளில் மட்டும் தான் விளையாடுவார் என்று கூறியிருந்ததால் அடுத்து இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டுமே அவர் விளையாட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



