தப்பு பண்ணிடாதீங்க, அவர் கண்டிப்பா 2023 உ.கோ அணியில் இருக்கனும் – அகர்கரிடம் 21 வயது இளம் வீரரை பரிந்துரைத்த கங்குலி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. டாமினிகா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் தரவரிசை நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலுக்கு தாக்குப் பிடிக்க முடியாத வெஸ்ட் இண்டீஸ் 2 இன்னிங்ஸிலும் குறைந்த ரன்களுக்கு சுருண்டு இரண்டரை நாட்களில் படுதோல்வியை சந்தித்தது. அதே போல பேட்டிங் துறையில் அறிமுகமாக வாய்ப்பு பெற்ற யசஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

Yashasvi Jaiswal

- Advertisement -

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த 17வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்த அவர் முதல் போட்டியிலேயே அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர் என்ற முகமது அசாருதீன் சாதனையை உடைத்து வெளிநாட்டு மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற சௌரவ் கங்குலி சாதனையையும் தகர்த்தார். பானி பூரி விற்பவரின் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து அடிமட்டத்திலிருந்து வளர்ந்த அவர் 2020 அண்டர்-19 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் (400) அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்றார்.

கங்குலி பரிந்துரை:
மேலும் ரஞ்சி, விஜய் ஹசாரே, சயீத் முஷ்டாக் அலி என 3 வகையான உள்ளூர் கிரிக்கெட்டிலும் சதங்களை அடித்து சிறப்பாக செயல்பட்ட அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் உச்சகட்டமாக ஒரு சீசனில் அதிக ரன்கள் (625) அடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் மற்றும் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற 2 ஆல் டைம் சாதனைகளை படைத்தார். அதன் காரணமாக தற்போது இந்தியாவுக்காக அறிமுகமாகிய அசத்தியுள்ள அவர் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக கோப்பையில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு நிலவும் பஞ்சத்தை போக்குவதற்காகவே தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகாமல் அனுபவமின்றி இருப்பதன் காரணமாக அவரை கண்டுகொள்ளாத தேர்வுக்குழு செப்டம்பரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தேர்ந்தெடுத்துள்ளது. அதன் காரணமாக 2023 உலக கோப்பையில் அவர் பேக்-அப் வீரராக கூட தேர்வு செய்யப்பட மாட்டார் என்பது இப்போதே உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாட தகுதியுடையவர் என்று தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அவரது ஆசிய கோப்பை அணியிலிருந்து வெளியே எடுத்து உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அடுத்து வரும் ஒருநாள் உலக கோப்பையில் ஜெய்ஸ்வால் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். சமீபத்திய ஐபிஎல் தொடரில் அவரை நான் மிகவும் அருகிலிருந்து பார்த்துள்ளேன். அதற்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அதனால் அவர் இந்தியாவுக்கு நீண்ட காலம் விளையாடுவதற்கு தேவையான தரத்தைக் கொண்டுள்ளார் என்று நான் கருதுகிறேன். பொதுவாகவே டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதற்கு நான் சாதகமாக இருப்பேன்”

Ganguly

“ஏனெனில் அது எதிரணி பவுலர்கள் அடிக்கடி தங்களுடைய லென்த்தை வலுக்கட்டாயமாக மாற்ற வேண்டிய அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே ஆசிய கோப்பை அணியிலிருந்து வெளியே எடுத்து அவரை உலகக் கோப்பைக்கு தேர்வு குழுவினர் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல டாப் ஆடரில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் என அனைவருமே வலது கை பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர்.

இதையும் படிங்க:பாவம் அவங்க, சரிந்து கிடக்கும் வெஸ்ட் இண்டீஸ் சரித்திரம் மீள்வதற்கு அதை செய்ங்க – கவாஸ்கர் முக்கிய ஆலோசனை

அப்படிப்பட்ட சூழ்நிலையில் 2011 உலகக்கோப்பையில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினர். எனவே இந்த உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால் போன்ற இடது கை பேட்ஸ்மேன் இருப்பது இந்தியாவுக்கு மிகப் பெரிய பலமாக அமையும் என்றால் மிகையாகாது.

Advertisement