இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவி காலம் நிறைவு பெறுகிறது. ரவி சாஸ்திரிக்கு பின் பொறுப்பேற்ற அவருடைய தலைமையில் 2023 ஆசியக் கோப்பையை மட்டுமே இந்தியா வென்றது. ஆனால் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா தோல்வியை சந்தித்தது.
மற்றபடி சாதாரண இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. அந்த வகையில் ஐசிசி கோப்பையை வென்று கொடுக்கத் தவறியதால் ராகுல் டிராவிட் மீது ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். சொல்லப்போனால் கடந்த 2023 உலகக் கோப்பையுடன் அவருடைய பதவி காலம் முடிவு பெற்றது.
பயிற்சியாளர் தகுதிகள்:
அப்போது தற்காலிகமாக அவருடைய பதவி காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த காலமும் முடிவு பெற்றதால் புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன் படி இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக வருபவர் மூன்றரை வருடம் வேலை செய்ய வேண்டும். அதாவது வரும் 1 ஜூலை 2024 முதல் 31 டிசம்பர் 2027 முதல் வரை 3.5 வருடம் புதிய பயிற்சியாளர் வேலை செய்ய வேண்டும்.
இந்த காலகட்டங்களில் 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2027 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா விளையாட உள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்ப அவர்கள் குறைந்தது 30 டெஸ்ட் போட்டி அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடிருக்க வேண்டும். அல்லது டெஸ்ட் அந்தஸ்து பெற்ற வேறு அணியின் தலைமைப் பயிற்சியாளராக குறைந்தது 2 வருடம் செயல்பட்டிருக்க வேண்டும்.
அல்லது உறுப்பு நாடு, ஐபிஎல், முதல் தரம், தேசிய ஏ அணியில் குறைந்தது 3 வருடங்கள் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவத்தை கொண்டிருக்க வேண்டும். அல்லது தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர் என்ற பிசிசிஐ லெவல் 3 சான்றிதழை கொண்டிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பம் செய்பவர்கள் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஐ.பி.எல் தொடரில் இருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள். முன்னணி அணிகளுக்கு விழுந்த அடி – காரணம் இதுதான்
மேற்கண்ட தகுதியை கொண்டிருப்பவர்கள் வரும் மே 27ஆம் தேதி மாலை 6 மணிக்குள் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் 2023இல் 2வது முறையாக ராகுல் டிராவிட் பதவி தாமாக புதுப்பிக்கப்படவில்லை தற்காலிகமாக நீட்டிப்பு செய்யப்பட்டது. எனவே மீண்டும் விரும்பினால் ராகுல் டிராவிட் இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.