
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த மாதம் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011இல் அறிமுகமான அவர் சச்சின் டெண்டுல்கருக்கு பின் மேட்ச் வின்னராக செயல்பட்டு இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக மாறினார். மொத்தம் 123 போட்டிகளில் 9230 ரன்களை அடித்த அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார்.
2014ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி இந்தியாவை அபாரமாக வழி நடத்தி 2016 – 2021 வரை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார். அவரது தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்த இந்தியா மொத்தம் 40 வெற்றிகளைப் பெற்றது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையும் அவர் படைத்தார்.
அப்படிப்பட்ட அவர் சமீப காலங்களில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்கத் தடுமாறினார். குறிப்பாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் மிகவும் தடுமாறிய விராட் கோலி நிறைய விமர்சனங்களை சந்தித்தார். அந்த நிலையில் இங்கிலாந்து தொடருக்கு முன்பாக அவர் ரோஹித் சர்மாவுடன் ஓய்வு பெற்றது பெரும்பாலான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
36 வயதிலும் சிறந்த ஃபிட்னஸ் கொண்டிருப்பதன் காரணமாக விராட் கோலி இன்னும் சில வருடங்கள் விளையாடி 10000 ரன்கள் அடிக்கத் தகுதியானவர் என்று சேவாக் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். இந்நிலையில் விராட் கோலியின் ஓய்வு தற்சமயத்தில் தேவையற்ற ஒன்று என ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இங்கிருந்து விராட் கோலி ஓய்வு வராமல் தொடர்ந்து விளையாடியிருந்தால் கண்டிப்பாக தற்போதைய இங்கிலாந்து தொடரில் பெரிய ரன்கள் குவித்திருப்பார் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது மிகவும் பொருத்தமற்றது என்று நான் சொல்வேன். எனது பார்வையில் ஒரு கருத்து இருக்கலாம். மற்றொருவர் மற்றொரு கருத்தைக் கொண்டிருப்பார்”
இதையும் படிங்க: தாக்கூரை தூக்கிட்டு நிதிஷ் ரெட்டிக்கு பதில்.. அவரை கொண்டு வந்தா மட்டுமே இந்தியா ஜெய்க்க முடியும்.. மஞ்ரேக்கர் பேட்டி
“ஒரு வீரராக நீங்களும் புரிந்து கொள்வீர்கள். ஒரு வீரராக விராட் கோலி தற்சமயத்தில் எங்கே நிற்கிறார் என்பதை அனைவரும் புரிந்து வைத்திருக்கிறார்கள். விராட்டை பாருங்கள். அனைவரும் ஏன் ஓய்வு பெற்றீர்கள்? என்று அவரிடம் கேட்கிறார்கள். கடந்த 5 வருடங்களாக அவருக்கு சிறப்பான வருடங்கள் அமையவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவரைப் போன்ற சாம்பியன் மறுவடிவமைப்பின் வாயிலாக மீண்டும் வருவார்கள். ஒருவேளை தற்போதைய இங்கிலாந்து தொடரில் விளையாடியிருந்தால் விராட் கோலி ரன்கள் அடித்திருப்பார் என்று கேரண்டியாக சொல்வேன். ஆனால் அவர் இதுவே செல்வதற்கு சரியான நேரம் என்று உணர்ந்துள்ளார்” எனக் கூறினார்.