இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த தோல்விக்கு லோயர் ஆர்டரில் விளையாடிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்காதது, ஃபீல்டிங் துறையில் கேட்சுகளை தவற விட்டது முக்கிய காரணமானது.
அதே போல பவுலிங் துறையில் நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா போல யாருமே இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுக்காதது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் 2வது போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத சர்துள் தாக்கூரை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
தாக்கூர், நிதிஷ் வேண்டாம்:
அவருக்கு பதிலாக நித்திஷ் ரெட்டியை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆனால் தம்மை பொறுத்த வரை குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் மஞ்ரேக்கர் அதற்கான காரணங்களை விவரித்தது பின்வருமாறு. “மன்னிக்கவும் தாக்கூர் அணியில் இருந்து வெளியேற வேண்டும். குல்தீப் யாதவ் அணிக்குள் வரவேண்டும் என்று நினைக்கிறேன்”
“இதை சொல்வதற்காக மன்னிக்கவும். இந்தியா இந்த ஒரு மாற்றத்தை செய்தாக வேண்டும். ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடியதற்காக நித்திஷ் ரெட்டியை நான் முதல் போட்டியில் தேர்ந்தெடுக்க ஆதரவு கொடுத்திருந்தேன். அது பிரபலமற்ற வாய்ப்பு. ஏனெனில் நிதிஷ் ரெட்டி விளையாடும் போது அணியின் சமநிலையில் கொஞ்சம் பாதிப்பு ஏற்படுகிறது”
2 ஸ்பின்னர்ஸ் வேணும்:
“அவர் 4வது வேகப்பந்து வீச்சாளரைப் போல முழுமையாக பந்து வீச மாட்டார். எனவே இந்தியா கொஞ்சம் கடினமான முடிவை எடுக்க வேண்டும். இங்கிலாந்து சூழ்நிலைகளில் தரமான பவுலர்களுடன் விளையாட வேண்டும். ஷமி இருந்திருந்தால் உங்களுடைய வேகப்பந்துவீச்சு துறை பலமாக இருந்திருக்கும். எனவே ஒரு வேகப்பந்து வீச்சாளரை குறைத்து நான் குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வருவேன்”
இதையும் படிங்க: சுதர்சன், தாக்கூருக்கு பதிலாக அந்த 2 பேரை சேர்க்கனும்.. இந்தியா வெற்றி பெற கவாஸ்கர் ஆலோசனை
“உலக வெப்பமயமாதல் காரணமாக இப்போதெல்லாம் இங்கிலாந்தில் சுழலுக்கு சாதகமான சூழ்நிலைகள் திறக்கிறது. அதற்குத் தகுந்தார் போல் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடும் ஸ்டைலை மாற்றியுள்ளார். இந்தியாவும் அதே தெளிவை பெற வேண்டும். முன்பெல்லாம் நியூசிலாந்து – இங்கிலாந்து என்பதை தாண்டி வெளிநாடுகளிலும் இந்தியா 3 ஸ்பின்னர்களை விளையாடிய காலங்கள் இருந்தது. எனவே குல்தீப் யாதவ் அணிக்குள் வர வேண்டும்” என்று கூறினார்.



