
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து தொடரை வெற்றிகரமாக துவங்கியது. மறுபுறம் பாகிஸ்தான் தங்களது சொந்த மண்ணில் முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் தோற்றது. அடுத்ததாக பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி துபாயில் நடைபெறுகிறது.
அதில் இந்தியாவை தோற்கடித்தால் மட்டுமே செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பையும் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பையும் வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா எளிதாக விடாது என முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளார். ஏனெனில் சுப்மன் கில் போன்ற திறமையான வீரர்கள் இந்திய அணியில் நிறைந்திருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.
எனவே இந்தத் தொடர் முழுவதிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி கங்குலி பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் 1 முதல் 2, 3, 4, 5 வரை 5 சுப்மன் கில்கள் இருக்கிறார்கள். அதாவது பேட்டிங் இடத்தில் விளையாடும் நமது அனைத்து பேட்ஸ்மேன்களும் சதத்தை அடித்து வெற்றி பெற்றுக் கொடுக்கக் கூடியவர்கள்”
“அக்சர் படேல் 5வது இடத்தில் விளையாடினால் நீங்கள் இந்திய அணியில் இருக்கும் திறமையின் ஆழத்தை கற்பனை செய்து பாருங்கள். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் இந்தியா லேசாக தடுமாறிய போது கேஎல் ராகுல் வந்தார். அதற்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் காத்திருந்தார்கள். அந்த வகையில் இந்தியா திறமையின் வீடாக இருக்கிறது”
“ஏனெனில் நாம் கொண்டிருக்கும் சிஸ்டம் மற்றும் கிரிக்கெட்டை விளையாடும் விதம் அப்படி இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக மட்டும் இந்தியா வெற்றி பெறக்கூடிய அணியாக இல்லை. இத்தொடர் முழுவதையும் அவர்கள் வெல்லும் அணியாக இருக்கிறார்கள். எனவே பாகிஸ்தானுக்கு எளிதாக இருக்காது. நமது ஸ்பின்னர்கள் முக்கிய பங்காற்றுவார்கள்”
இதையும் படிங்க: ஏற்கனவே 2 முறை சாய்ச்சாச்சு.. இந்தமுறையும் விடமாட்டம்.. இந்திய அணியை விடமாட்டோம் – எச்சரித்த பாக் வீரர்
“இந்தியா அதே பவுலிங் கலவையுடன் விளையாடும் என்று நம்புகிறேன். துபாயில் வெற்றி பெறுவதற்கு ஸ்பின்னர்கள் தேவை. அங்குள்ள ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் திரும்பும் என்று எனக்குத் தெரியும். ஆனால் பாகிஸ்தான் சுழலை நன்றாக எதிர்கொள்ள மாட்டார்கள். இந்தியாவிடம் தரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்” எனக் கூறினார்.