ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கப் போகும் இந்த தொடரை 1987, 2011 ஆகிய வருடங்களில் அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா முதல் முறையாக தற்போது முழுவதுமாக தங்கள் மண்ணில் நடத்துகிறது. அதனால் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோபையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்திக்கும் தோல்விகளை நிறுத்துமா என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
முன்னதாக 2015, 2019 ஆகிய உலகக் கோப்பையின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் தோல்விக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் அடங்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முறையே ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியதே முக்கிய காரணமாக அமைந்தது. இத்தனைக்கும் சாதாரண இருதரப்பு மற்றும் லீக் சுற்றில் முரட்டுத்தனமாக அடிக்கும் இவர்களில் தற்போது சிக்கர் தவான் விளையாட மாட்டார் என்ற நிலையில் இந்நாள் மற்றும் முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இத்தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
கங்குலி அட்வைஸ்:
குறிப்பாக கடந்த உலக கோப்பையில் 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்த ரோகித் சர்மா அதன் பின் சமீபத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் உட்பட தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார். அதே போல ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ரன்களையும் 46 சதங்களையும் அடித்து ஜாம்பவானாக செயல்பட்டு வரும் விராட் கோலியும் 50 ஓவர் உலககோப்பை நாக் அவுட் போட்டிகளில் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டதில்லை. இந்நிலையில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு இந்தியாவுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் இத்தொடரில் களமிறங்குமாறு அவர்களை முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையான உலகக்கோப்பை வரும் போதிலும் இந்தியா வெல்ல முடியாமல் தவிப்பதற்கு நாக் அவுட் சுற்றில் இவர்களைப் போன்ற நட்சத்திர வீரர்கள் அரை சதம் கூட அடிக்காததே தோல்விக்கு காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கடந்த முறை இம்முறை என்பது போன்ற பேச்சுகளை நான் எப்போதும் நம்ப மாட்டேன். மாறாக செயல்பாடுகளை நம்புகிறேன். தற்போது அவர்கள் 34 – 35 வயது நிரம்பியுள்ளதால் அடுத்த உலக கோப்பையில் என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு தெரியாது”
“ஒவ்வொரு வருடமும் டி20 உலக கோப்பை போன்ற ஐசிசி தொடர்கள் வருகின்றன. குறிப்பாக நாங்கள் விளையாடிய காலகட்டங்களை விட தற்போது ஒவ்வொரு வருடமும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஏதேனும் ஐசிசி தொடர்கள் வருகிறது. அதில் வெற்றி பெறுவதற்கு நல்ல செயல்பாடுகள் அவசியமாகும். எனவே கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுடைய சொந்த கண்ணோட்டத்தில் பார்க்காமல் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். அதுதான் அவர்களைப் பொறுத்த வரை பெரிதாக இருக்கும்”
“ஒவ்வொரு முறையும் நாம் இவை அனைத்தும் சதங்கள் மற்றும் ஒரு போட்டியை பொறுத்தது அல்ல மாறாக அதை சரியான நேரத்தில் செய்வது என்பதை மறந்து விடுகிறோம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் அதை நிரூபிப்பதற்கு மிகப்பெரிய இடமாகும். நல்ல அணிகளில் பெரிய போட்டிகளில் அதை செய்யும் வீரர்கள் இருக்கின்றனர். 2003இல் ரிக்கி பாண்டிங் அதை செய்ததைப் போல் 2007இல் மேத்தியூ ஹெய்டன் செய்தார். ஆஸ்திரேலியாவுக்காக 2015 தொடரில் அனைவரும் முன் நின்றார்கள்”
இதையும் படிங்க:பவுலர் கேப்டனா வரக்கூடாதுன்னு இருக்கா? ரகானேவுக்கு பதில் அவர கேப்டனாவே போட்ருக்கலாம் – தேர்வுக்குழுவை சாடிய சபா கரீம்
“அந்த வகையில் பெரிய போட்டிகளில் உயர்ந்து நிற்கும் அளவுக்கான வீரர்கள் பெரிய அணிகளில் இருப்பார்கள். இந்தியாவுக்கு 2011 ஃபைனலில் கௌதம் கம்பீர் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் ரசிகர்கள் நிரம்பி வழிந்த அழுத்தம் நிறைந்த வான்கடே மைதானத்தில் அபாரமான இன்னிங்ஸ் விளையாடினர்” என்று கூறினார்.