வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக ஜூலை மாதம் அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. முதலில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மட்டுமின்றி 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் சுமாராக கேப்டன்ஷிப் செய்து பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிய ரோகித் சர்மா பதவி விலக வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை வைத்தும் அதை ஏற்காத தேர்வுக்குழு மீண்டும் அவரையே கேப்டனாக அறிவித்துள்ளது. அதே போல பேட்டிங்கில் விராட் கோலியின் சொதப்பிய நிலையில் அதன் பழியை புஜாரா மீது போட்டு கழற்றி விட்டுள்ளதாக சுனில் கவாஸ்கர் விமர்சித்தார்.
அது போக ரஞ்சிக் கோப்பையில் அசத்தி வரும் சர்பராஸ் கான் மீண்டும் புறக்கணிக்கப்பட்டு ஐபிஎல் தொடரில் அசத்திய ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் ஆகியோர் டெஸ்ட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் விமர்சனங்களை எழுப்பியது. அதை விட வருங்காலத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் துணை கேப்டனாக அஜிங்க்ய ரகானே அறிவிக்கப்பட்டது யாரையுமே திருப்திப்படுத்தவில்லை எனலாம். ஏனெனில் கடந்த 10 வருடங்களாக மிடில் ஆர்டரில் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டு 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் விராட் கோலிக்கு பதிலாக இந்தியாவை மிகச் சிறப்பாக வழி நடத்திய அவர் 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா மண்ணில் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த அனுபவத்தை கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை.
பவுலர் வரக்கூடாதா:
இருப்பினும் 34 வயதை கடந்து போராடி கம்பேக் கொடுத்த அவர் தற்காலிக நிலைமையை சமாளிப்பதற்காக மட்டுமே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சொல்லப்போனால் இதே போல ஏற்கனவே கழற்றி விட்டப்பட்ட புஜாரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு ஃபைனலில் சொதப்பியதால் தற்போது மீண்டும் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளார். அதனால் ரகானேவுக்கு பதிலாக சுப்மன் கில் அல்லது அக்சர் படேல் போன்ற இளம் வீரர்கள் துணை கேப்டனாக நியமித்திருக்கலாம் என சுனில் காவாஸ்கர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த அறிவிப்பின் பின்னணியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் இந்திய அணியில் மறுக்க முடியாத வீரராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா பவுலராக இருப்பதால் கேப்டனாக நியமிப்பதற்கு யாரும் பேசுவது கூட இல்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒருவேளை ஜடேஜா இல்லையென்றாலும் கில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“ரவீந்திர ஜடஜாவை பற்றி யாரும் ஏன் பேசுவதில்லை என்பது எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அவர் அனைத்து வகையான இந்திய அணியிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்மை வீரராக வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். எனவே ஏன் அவரை நீங்கள் ஒரு கேப்டனாக பேசுவதில்லை? குறிப்பாக 3 வகையான அணியிலும் மாற்று வீரர் இல்லாத அளவுக்கு தரமான அவர் இந்தியாவை வழி நடத்தும் அளவுக்கு திறமையும் கொண்டுள்ளார். ஒருவேளை அவர் இல்லையென்றாலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சுப்மன் கில்லை தேர்வுக்குழு நியமித்திருக்க வேண்டும்”
“மேலும் நீங்கள் அடுத்த தலைமுறையை உருவாக்கும் வகையில் ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகிய இளம் வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அப்படிப்பட்ட நிலையில் ரகானேவை ஏன் கேப்டனாக நியமிக்க வேண்டும். இதன் பின்னணியில் இருக்கும் லாஜிக் என்ன? குறிப்பாக கம்பேக் கொடுத்து வெறும் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள அவர் சிறப்பாக செயல்பட்டார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உண்மையாகவே நீங்கள் வருங்காலத்தை கருத்தில் கொண்டால் ஒரு இளம் வீரரை தான் வாய்ப்பளித்து வளர்க்க வேண்டும்”
இதையும் படிங்க:தோனி பண்ணது நியாயப்படி தப்பு அவரை தடை பண்ணியிருக்கணும் – வீரேந்திர சேவாக் கருத்து
“அதை விட்டு விட்டு ரகானேவை தேர்ந்தெடுத்து மீண்டும் ஏன் பின்னோக்கி செல்கிறீர்கள்? ரகானே கேப்டனாக அனுபவமிக்கவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் ரோஹித்துக்கு பின் அடுத்த கேப்டனாக வருபவரையே துணை கேப்டனாக நியமிக்க முயற்சித்திருக்க வேண்டும்” என்று கூறினார்.