தொடரும் தோல்விகள் – சத்தமின்றி ஐசிசி நாக் அவுட்டில் சொதப்பி வரும் மந்தனா, அடித்து நொறுக்கும் ஹர்மன்ப்ரீத் – புள்ளிவிவரம்

Women's World Cup
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அசத்தலாக செயல்பட்டு நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் வழக்கம் போல அரையிறுதியில் தோற்று ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 23ஆம் தேதியன்று வலுவான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் களமிறங்கிய இந்தியா போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. குறிப்பாக ஆஸ்திரேலியா நிர்ணயித்த 173 ரன்களை துரத்தும் போது ஷபாலி வர்மா 9, ஸ்மிரிதி மந்தனா 2, யஸ்டிக்கா பாட்டியா 4 என முக்கிய டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள்.

அதனால் 28/3 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியாவை 4வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய ஜெமிமா ரோட்ரிகஸ் 43 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அவருடன் விளையாடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தொடர்ந்து செயல்பட்டு 6 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதம் கடந்ததால் கடைசி 32 பந்துகளில் 40 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட இந்தியாவின் வெற்றி கையிலிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் 2 ரன் எடுக்க முயற்சித்து துரதிஷ்டவசமாக 52 ரன்களில் (34) ரன் அவுட்டான அவருக்குப் பின் வந்த வீராங்கனைகள் சொதப்பியதால் 20 ஓவரில் 167/8 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

நாக் அவுட் நாயகி:
முன்னதாக 2017, 2020 ஐசிசி உலகக் கோப்பை ஃபைனல்களில் தோல்வியை சந்தித்து 2022 காமன்வெல்த் போட்டியின் பைனலிலும் தங்கப்பதக்கத்தை வெல்ல தவறிய இந்திய மகளிர் அணி இம்முறையும் அரையிறுதியுடன் வெளியேறியுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. பொதுவாக ஐசிசி உலக கோப்பை தொடர்களில் நாக் அவுட் போட்டிகள் எப்போதுமே அழுத்தம் மிகுந்த போட்டிகளாக பார்க்கப்படுகிறது. அதில் வெற்றி பெறுவதற்கு மகளிர் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் ஸ்மிருதி மந்தனா பெரிய ரன்களை குவிப்பது அவசியமாகும்.

ஆனால் கடந்த 2013ஆம் ஆண்டு அறிமுகமான அவர் தனது கேரியரில் இதுவரை நடைபெற்ற 5 ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் முறையே 6, 0, 34, 11, 2 என எந்த போட்டியிலும் அரை சதம் தாண்டாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி சொதப்பியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. மறுபுறம் மகளிர் கிரிக்கெட்டில் ஏற்கனவே ஏராளமான உலகக் கோப்பைகளை வென்று முடி சூடா அரசியாக திகழும் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2017 உலகக் கோப்பை அரையிறுதியில் 171* (115) ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்த ஹர்மன்ப்ரீத் கௌர் 2022 காமன்வெல்த் போட்டியின் பைனலில் 65 (43) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடி இதே போல ரன் அவுட்டானார்.

- Advertisement -

தற்போது இப்போட்டியிலும் 52 ரன்கள் குவித்த அவர் மகளிர் ஐசிசி உலக கோப்பை நாக் அவுட் போட்டிகளில் 3 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த முதல் இந்திய வீராங்கனையாக அசத்தியுள்ளார். ஆனால் அவரை தவிர்த்து ஒட்டுமொத்த மகளிர் உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் இதர இந்திய வீராங்கனைகள் அனைவரும் சேர்ந்து வெறும் 3 முறை மட்டுமே 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளனர்.

அதை விட ஒட்டுமொத்தமாக ஐசிசி உலக கோப்பை நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்தியர் என்ற சச்சினை மிஞ்சி ஏற்கனவே ஹர்மன்ப்ரீத் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஹர்மன்பிரீத் கௌர் : 302* (5 இன்னிங்ஸ்)
2. சச்சின் டெண்டுல்கர் : 236 (4 இன்னிங்ஸ்)
3. யுவராஜ் சிங் : 235 (4 இன்னிங்ஸ்)

இதையும் படிங்க: யுவியிடம் அந்த திறமை இல்ல ஆனா அந்த ரெண்டுலையும் தோனி ஸ்பெஷல் – ரசல் அர்னால்ட் கூறும் வித்யாசம் என்ன

இதிலிருந்து ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் குறிப்பாக வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்து நொறுக்கும் செயல்பாடுகளை ஹர்மன்ப்ரீத் கௌர் வெளிப்படுத்தியும் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் ஸ்மிருத்தி மந்தனா சத்தமின்றி சொதப்புவது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாவது தெளிவாகிறது.

Advertisement