யுவியிடம் அந்த திறமை இல்ல ஆனா அந்த ரெண்டுலையும் தோனி ஸ்பெஷல் – ரசல் அர்னால்ட் கூறும் வித்யாசம் என்ன

Russel Arnold
- Advertisement -

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எம்எஸ் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் சர்வதேச அளவில் குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர்கள். அதில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராகவும் 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகவும் சாதனை படைத்த எம்எஸ் தோனி இந்தியாவின் மகத்தான கேப்டனாக ரசிகர்கள் கொண்டாடப்படுகிறார். அவருக்கு நிகராக அவரது தலைமையில் 2007 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கு அளப்பரிய பங்காற்றிய யுவராஜ் சிங்கையும் ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை.

அதை விட பேட்டிங் துறையில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய எத்தனையோ போட்டிகளில் நங்கூரமான பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய ரன்களை குவித்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்த இவர்கள் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாகவும் போற்றப்படுகிறார்கள். இந்நிலையில் பெரும்பாலான தருணங்களில் அதிரடியாக விளையாடுவதில் சிறந்து விளங்கும் யுவராஜ் சிங் அதிகப்படியான அழுத்தம் இருக்கும் போது தடுமாற்றமாக செயல்படக்கூடியவர் என்று முன்னாள் இலங்கை வீரர் ரசல் அர்னால்ட் கூறியுள்ளார்.

- Advertisement -

தோனியின் ஸ்பெஷல்:
ஆனால் அதிகப்படியான அழுத்தம் நிலவும் போது நங்கூரமாகவும் விரைவாக ரன்களை சேர்க்க வேண்டிய நேரத்தில் அதிரடியாக விளையாடும் 2 திறமைகளும் எம்எஸ் தோனியிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். 2011 உலகக் கோப்பை பைனலில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய போது நிலவிய அழுத்தமான சூழ்நிலையில் முத்தையா முரளிதரனை யுவராஜ் சிங் எதிர்கொள்ள தடுமாறுவார் என்ற கண்ணோட்டத்துடன் அவருக்கு முன்பாகவே களமிறங்கிய தோனி ஆரம்பத்தில் நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் விளையாடி இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அந்த வகையில் 2 வெவ்வேறு சூழ்நிலைகளிலும் சிறப்பாக விளையாடும் திறமை தோனியிடம் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஒரு சிலரால் மட்டுமே செய்யக்கூடிய 2 வேலைகளையும் தோனியால் செய்ய முடியும். 2 வேலைகள் என்றால் அழுத்தம் ஏற்படும் போது அதை உள்வாங்கி விளையாடும் தன்மை அவரிடம் உள்ளது. அது என்னுடைய பலமாகவும் இருக்கிறது. அந்த சமயத்தில் என்னாலும் பவுண்டரிகளை அடிக்க முடியும். ஆனால் தொடர்ந்து 15 ரன்களை ஒவ்வொரு ஓவருக்கும் அடிக்க முடியாது”

- Advertisement -

“ஒருவேளை ஓவருக்கு 8 முதல் 10 ரன்கள் அடிக்க வேண்டிய சூழ்நிலை கொடுத்தால் என்னால் அடிக்க முடியும் என்று நம்பிக்கை ஏற்படும். ஆனால் ஓவருக்கு 15 முதல் 20 ரன்கள் தேவைப்பட்டாலும் தன்னம்பிக்கையுடன் தொடர்ச்சியாக சிக்சர்களை அடித்து போராடும் தைரியமும் திறமையும் தோனியிடம் இருக்கிறது. அந்த 2 வேலைகளையும் செய்வதாலேயே தோனி மிகவும் ஸ்பெஷலானவராக உள்ளார். உலகில் நிறைய வீரர்களால் இந்த 2 வேலைகளையும் செய்ய முடிவதில்லை. இருப்பினும் தோனியை போல அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை பறக்க விடும் சில வீரர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்”

“எடுத்துக்காட்டாக யுவராஜ் சிங் சொல்லலாம். ஆனால் அதிகப்படியான அழுத்தம் நிலவும் போது தன்னுடைய பார்ட்னர் தோனியை போல யுவராஜ் சிங்கால் அதை உள்வாங்கி விளையாட முடிவதில்லை. மாறாக அவர் எப்போதும் அதிரடியாக விளையாடுவதில் சிறந்தவராக இருந்தார். ஆனால் அந்த 2 சூழ்நிலைகளிலும் தோனி சிறந்தவராக இருந்தார். அவரால் தேவைப்படும் நேரத்தில் அழுத்தத்தை உள்வாங்கி தடுப்பாட்டத்தை விளையாட முடிந்தது. அதே போல் தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக எதிரணியின் முகத்தில் பஞ்ச் விடும் ஆட்டத்தையும் வெளிப்படுத்த முடிந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க: திறமைக்கு ஆதரவு கொடுப்பது நம்ம கடமை, தடுமாறும் நட்சத்திரம் வீரருக்கு கம்பீர் ஆதரவு – கலாய்க்கும் ரசிகர்கள்

அவர் கூறுவது போல பெரும்பாலான போட்டிகளில் யுவராஜ் சிங்கை விட கீழ் பேட்டிங் வரிசையில் களமிறங்கிய தோனி அழுத்தத்தை உள்வாங்கி ஆரம்பத்தில் நிதானமாகவும் கடைசியில் அதிரடியாகவும் செயல்பட்ட காரணத்தாலேயே வெற்றிகரமான ஃபினிஷராகவும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10000+ ரன்களை குவித்தவராகவும் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement