TNPL 2023 : நடராஜன் அணிக்கு இப்படி பரிதாப நிலையா – முதல் பந்திலிருந்தே வீரத்தை காட்டிய மதுரை வென்றது எப்படி?

TNPL 21
- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் 2023 டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜூன் 29ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு நடைபெற்ற 21வது லீக் போட்டியில் மதுரை பேன்தர்ஸ் மற்றும் திருச்சி ஆகிய அணிகள் மோதின. சேலத்தில் இருக்கும் எஸ்சிஎஃப் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ கோல்டன் டக் அவுட்டாகி சென்றார். அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரர் சரண் 5 (9) ரன்களில் அவுட்டானதால் 7/2 என ஆரம்பத்திலேயே திருச்சி தடுமாறியது.

அந்த நிலைமையில் ஜோடி சேர்ந்த பிரான்சிஸ் ரோக்கின்ஸ் மற்றும் மணி பாரதி ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்ய முயற்சித்தனர். இருப்பினும் அதில் தடுமாறிய பிரான்சிஸ் ரோக்கின்ஸ் 18 (19) ரன்களில் முருகன் அஸ்வின் சுழலில் கிளீன் போல்டானார். அந்த நிலைமையில் களமிறங்கிய பெராரியோ தனது பங்கிற்கு மணி பாரதியுடன் சேர்ந்து நிதானமாக பேட்டிங் செய்து 4வது விக்கெட்டுக்கு 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 21 (23) ரன்களில் 15வது ஓவரின் முதல் பந்தில் சரவணன் அவுட்டாக்கினார்.

- Advertisement -

எளிதான வெற்றி:
அத்தோடு நிற்காத சரவணன் அடுத்து வந்த ஜாஃபர் ஜமாலை 5வது பந்தில் 1 (2) ரன்னில் அவுட்டாகி அடுத்ததாக வந்த ராஜ்குமாரை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார். போதாக்குறைக்கு அடுத்த ஓவரிலேயே மறுபுறம் நங்கூரமாக போராடிய மணி பாரதியும் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 48 (40) ரன்களில் அவுட்டானதால் கடைசி நேரத்தில் அதிரடி காட்டுவதற்கு பேட்ஸ்மேன்கள் இல்லாமல் திண்டாடிய திருச்சி 18.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 105 ரன்களுக்கு சுருண்டது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்டு ஆரம்பத்திலேயே பாதி வெற்றியை வசமாக்கிய மதுரை சார்பில் அதிகபட்சமாக சரவணன் 3 விக்கெட்டுகளையும் குர்ஜப்நீத் சிங் மற்றும் அஜய் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 106 என்ற சுலபமான இலக்கை துரத்திய மதுரைக்கு சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்கள் கொண்டாடும் நடராஜன் வேகத்தில் கேப்டன் ஹரி நிசாந்த் ஆரம்பத்திலேயே 11 (12) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அவரைத் தொடர்ந்து வந்த ஜெகதீசன் கௌஷிக் தடுமாற்றமாகவே செயல்பட்டு 19 (17) ரன்களில் அவுட்டாக மறுபுறம் 12 ஓவர்கள் வரை நிலைத்து நின்றாலும் மெதுவாகவே விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் சுரேஷ் லோகேஷ்வர் 5 பவுண்டரியுடன் 32 (39) ரன்களில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் இலக்கு மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் மிடில் ஓவர்களில் சற்று அதிரடியாக செயல்பட்ட ஸ்வப்னில் சிங் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 25* (19) ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18* (15) ரன்களும் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

அதனால் 17 ஓவரிலேயே 108/3 ரன்கள் எடுத்த மதுரை 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. மறுபுறம் பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே சொதப்பி வெற்றியை கோட்டை விட்ட திருச்சி சார்பில் அதிகபட்சமாக ஈஸ்வரன் 2 விக்கெட்டுகளும் நடராஜன் 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய சரவணன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க:தோனி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக தான் கேப்டன்சி வேணாம்னு முடிவு பண்ணேன் – மனம்திறந்த சுரேஷ் ரெய்னா

இந்த வெற்றியால் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்த மதுரை புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்து பிரகாசப்படுத்தியுள்ளது. மறுபுறம் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளிலும் ஒன்றில் கூட வெற்றியை பதிவு செய்யாமல் 5 தோல்விகளை சந்தித்த திருச்சி முதல் அணியாக லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியுள்ளது.

Advertisement