தப்பு இந்திய மைதானங்கள் மேல.. இனிமேல் புதிய பாகிஸ்தான பாப்பீங்க.. இமாம் அதிரடி

Imam Ul Haq
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 1992 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களுடைய முதல் 4 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. குறிப்பாக நெதர்லாந்து மற்றும் இலங்கையை எளிதாக தோற்கடித்த அந்த அணி வலுவான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்விகளை சந்தித்தது.

அதிலும் குறிப்பாக இந்தியாவிடம் வரலாற்றில் 8வது முறையாக உலக கோப்பையில் தோற்ற பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவிடம் வார்னர் – மார்ஷ் ஆகியோரிடம் சரமாரியாக அடி வாங்கி தோற்றது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதனால் செமி ஃபைனலுக்கு செல்ல அக்டோபர் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

- Advertisement -

இந்திய மைதானங்கள்:
இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் மைதானங்கள் மிகவும் சிறியதாக இருப்பதாலேயே உலகத்தரம் வாய்ந்த தங்களுடைய பவுலர்கள் சுமாராக செயல்பட்டதாக தெரிவிக்கும் இமாம்-உல்-ஹக் அடுத்த போட்டியிலிருந்து புதிய பாகிஸ்தான் அணியை பார்ப்பீர்கள் என்று அதிரடியாக பேசியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் பெரிய ரன்கள் அடிக்கப்படுகிறது. அதனால் நீங்கள் இதர அணிகளை பார்க்கும் போது கூட எளிதாக 300 – 350 ரன்கள் அடிக்கின்றன”

“எடுத்துக்காட்டாக இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 400 ரன்கள் அடித்ததை சொல்லலாம். எனவே எங்களுடைய பவுலர்கள் மட்டும் அடி வாங்கவில்லை. இந்தியாவில் உள்ள பிட்ச்கள் நன்றாக இருப்பதாலும் மைதானங்கள் சிறிதாக இருப்பதாலும் பேட்ஸ்மேன்கள் செட்டிலாகி விட்டால் சிறிய தவறுகள் செய்தாலும் அடித்து நொறுக்குகிறார்கள். இருப்பினும் இதை ஒரு சாக்காக சொல்லவில்லை இங்குள்ள சூழ்நிலைகள் இப்படித்தான் இருக்கும்”

- Advertisement -

“கடந்த 2 போட்டிகளில் சந்தித்த தோல்வி எங்களுக்கு மனதளவில் பின்னடைவை கொடுத்துள்ளது. ஆனால் கிரிக்கெட்டிலும் வாழ்விலும் இதுபோன்ற மேடு பள்ளங்கள் இருப்பது சகஜமாகும். ஆனாலும் நாங்கள் நேர்மையாக இருந்து எங்களுடைய அணியில் ஒருவரை ஒருவர் ஆதரவு கொடுக்கிறோம். குறிப்பாக எங்களுடைய வீரர்களுக்கு போட்டி நாளில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது தெரியும்”

இதையும் படிங்க: ஹாசிம் அம்லாவின் சாதனையை தகர்த்த சுப்மன் கில்.. ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

“இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள நாங்கள் 2 வெற்றி தோல்விகளை பதிவு செய்துள்ளோம். எங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது. கடந்த 2 போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். நீங்கள் என்ன பேசினாலும் போட்டி நாளன்று களத்தில் எப்படி செயல்படுகிறீர்கள் என்பது முக்கியம். எனவே அதைப்பற்றி நாங்கள் பேசியுள்ளோம். அதனால் சென்னையில் நீங்கள் எங்களுடைய புதிய அணியை பார்ப்பீர்கள்” என்று கூறினார்.

Advertisement