TNPL 2023 : மதுரை மானத்தை காத்த வாஷிங்டன் சுந்தர், மேஜிக் நிகழ்த்திய அஜய் – கையில் வைத்திருந்த வெற்றியை சேப்பாக் விட்டது எப்படி?

- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் 2023 டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜூன் 26ஆம் தேதி நடைபெற்ற 18வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் மதுரை பேன்தர்ஸ் ஆகிய அணிகள் மோதின. சேலத்தில் இருக்கும் எஸ்சிஃஎப் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மதுரைக்கு தொடக்க வீரர் ஆதித்யா 6 (6) ரன்னில் ரன் அவுட்டாகி சென்றார். அதை விட ஹரி நிஷாந்த் 2 (5) கௌஷிக் 4 (3) லோகேஷ்வர் 6 (10) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் 4.5 ஓவரில் 18/4 என ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கி நிதானமாக விளையாட முயற்சித்த ஸ்வப்னில் சிங் 11 (16) ரன்களிலும் ஸ்ரீ அபிஷேக் 21 (18) ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை ஏற்படுத்தினர். அதன் காரணமாக 50/6 என மேலும் சரிந்த அந்த அணி 100 ரன்களை தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட போது நம்பிக்கை நட்சத்திரம் வாஷிங்டன் சுந்தர் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி காப்பாற்ற போராடினார்.

- Advertisement -

போராட்ட வெற்றி:
இருப்பினும் அவருக்கு கை கொடுப்பதற்காக எதிர்ப்புறம் நிதானமாக விளையாடிய தீபன் லிங்கேஷ் தடுமாறி 9 (15) ரன்களில் அவுட்டானார். ஆனாலும் மனம் தளராமல் அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 2 பவுண்டரி 5 சிக்சருடன் அரை சதமடித்து 56* (30) ரன்களை 186.67 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து மதுரையின் மானத்தை ஓரளவு காப்பாற்றிய நிலையில் கடைசி நேரத்தில் சரவணன் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22* (17) ரன்கள் எடுத்து அசத்தினார். அதனால் தப்பிய மதுரை 20 ஓவர்களில் 141/7 ரன்கள் எடுக்க சேப்பாக் சார்பில் அதிகபட்சமாக பாபா அபாரஜித் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 142 என்ற சுலபமான இலக்கை துரத்திய சேப்பாக்கத்திற்கு 8.6 ஓவர்கள் வரை நின்று 59 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கம் கொடுத்த சந்தோஷ் ஷிவ் 28 (32) ரன்களும் நாராயணன் ஜெகதீசன் 35 (29) ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து வந்த பாபா அபாரஜித் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் வந்த சஞ்சய் யாதவ் 9 (9) ரன்களில் அவுட்டான போது 13.3 ஓவரில் 85/3 என்ற நிலையிலிருந்து சேப்பாக் வெற்றியை கையில் வைத்திருந்தது.

- Advertisement -

ஆனால் அப்போதிலிருந்து நெருப்பாக பந்து வீசிய மதுரை பபுலர்கள் ஒருபுறம் சவால் கொடுத்த பாபாஜித்தை அப்படியே விட்டு எதிர்ப்புறம் பிரதோஷ்பால் 9 (9) சசி தேவ் 6 (3) என லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி அழுத்தத்தை உண்டாக்கினர். குறிப்பாக 19வது ஓவரில் ஹரிஷ் குமாரை 3 (5) ரன்களில் அவுட்டாக்கிய அஜய் கிருஷ்ணா அடுத்து வந்த மதன்குமாரை கோல்டன் டக் அவுட்டாக்கினார். மேலும் ஹாட்ரிக் பந்தில் விக்கெட் எடுக்க தவறினாலும் 4வது பந்தில் ராமலிங்கம் ரோகித்தை டக் அவுட்டாக்கிய அவர் சேப்பாக்கத்தை மொத்தமாக வீழ்த்தினார் என்று சொல்லலாம்.

ஏனெனில் மறுபுறம் போராடிய பாபா அபாரஜித்தும் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட போது 33 (29) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 20 ஓவரில் சேப்பாக்கத்தை 129/2 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற மதுரை சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும் முருகன் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அஜய் கிருஷ்ணா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க:வீடியோ : மாஸ் த்ரில்லர் மேட்ச், சூப்பர் ஓவரில் 30 ரன்கள் – வெஸ்ட் இண்டீஸை ஓடவிட்ட நெதர்லாந்து சரித்திர உலக சாதனை

மேலும் பங்கேற்ற 4 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்த மதுரை புள்ளி பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. மறுபுறம் கையில் இருந்த வெற்றியை கோட்டை விட்ட சேப்பாக் 6 போட்டிகளில் 4வது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு சரிந்தது.

Advertisement