மாஸ் த்ரில்லர் மேட்ச், சூப்பர் ஓவரில் 30 ரன்கள் – வெஸ்ட் இண்டீஸை ஓடவிட்ட நெதர்லாந்து சரித்திர உலக சாதனை

- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 ஐசிசி உலக கோப்பையில் பங்கேற்கும் கடைசி கிரிக்கெட் 2 அணிகளை தீர்மானிக்கும் குவாலிபயர் தொடர் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. அதில் ஜூன் 26ஆம் தேதி குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கி வெஸ்ட் இண்டீஸ் கடந்த போட்டியில் ஜிம்பாப்வேவிடம் தோற்ற வெறியில் அதிரடியாக விளையாடி 50 ஓவரில் 374/6 ரன்கள் குவித்து மிரட்டியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக 9 பவுண்டரி 6 சிக்ஸருடன் சதமடித்து 104* (65) ரன்கள் எடுக்க பிரண்டன் கிங் 76, ஜான்சன் சார்லஸ் 54, கேப்டன் ஷாய் ஹோப் 47 என இதர வீரர்களும் பொறுப்புடன் செயல்பட்டு முக்கிய ரன்களை எடுத்தனர். நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி மற்றும் ஜுல்பிக்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து கத்துக் குட்டியாக கருதப்படும் நெதர்லாந்து 375 ரன்களை எங்கே துரத்த போகிறது என்றே பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

சரித்திர உலக சாதனை:
அதற்கேற்றார் போல் விக்ரம்ஜித் சிங் 37, மேக்ஸ் ஓ’தாவுத் 16, பரேசி 27, பஸ் டீ லீடி 22 என அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் டேஜா நிதமனரு ஆகியோர் அதிரடியாக விளையாடி நெதர்லாந்தின் வெற்றிக்கு போராடினார்கள்.

குறிப்பாக 30வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் நிதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற வகையில் அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 5வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த போது கேப்டன் எட்வர்ட்ஸ் 67 (47) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த ஜுல்பிகர் 3 ரன்னில் அவுட்டாகி சென்றாலும் மறுபுறம் தொடர்ந்து அட்டகாசம் நிகழ்த்திய தேஜா நிதமனரு சதமடித்து 11 பவுண்டரி 3 சிக்ஸருடன் 111 (76) ரன்கள் விளாசி 46வது ஓவரில் ஆட்டமிழந்தார்

- Advertisement -

அப்போதும் 46 ஓவரில் 327/7 என நெதர்லாந்து தடுமாறியதால் வெஸ்ட் இண்டீஸ் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் வந்த லோகன் வேன் பீக் – ஆர்யன் தத் ஆகியோர் அதிரடி காட்டினர். அதனால் வெற்றியை நெருங்கிய நெதர்லாந்துக்கு அல்சாரி ஜோசப் வீசிய கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அதில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த பீக் 2வது பந்தில் சிங்கிள் எடுத்த நிலையில் 3வது பந்தில் ஆர்யன் தத் 16 (9) ரன்களில் அவுட்டானார். அதைத்தொடர்ந்து வந்த க்ளேடன் பிளாய்ட் தடுமாறி சிங்கிள் எடுக்க 5வது பந்தில் பீக் 2 ரன்கள் எடுத்ததால் ஸ்கோர் சமமானது.

அதனால் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது 3 பவுண்டரி 1 சிக்சருடன் பீக் 28 (14) ரன்களில் அவுட்டானதால் போட்டி டையில் முடிந்தது அனைத்து ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வீசப்பட்ட சூப்பர் ஓவரில் அனுபவம் மிகுந்த ஜேசன் ஹோல்டரை மீண்டும் வேன் பீக் எதிர்கொண்டார்.

ஆனால் கடைசி பந்தில் ஃபினிஷிங் செய்ய தவறிய வெறியுடன் களமிறங்கிய அவர் 4, 6, 4, 6, 6, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்க விட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி தனி ஒருவனாக 30* (6) ரன்கள் குவித்து மாஸ் காட்டினார். அதிலேயே பாதி உடைந்த வெஸ்ட் இண்டீஸ் 31 ரன்களை சூப்பர் ஓவரில் சேசிங் செய்கையில் மீண்டும் பவுலராக வந்த வேன் பீக் 7 (3) ரன்களில் ஜான்சனையும் அடுத்து வந்த செஃபார்ட்டையும் கோல்டன் டக் அவுட்டாக்கி மாஸ் காட்டினார். அதனால் 8/2 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய நெதர்லாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

இதன் வாயிலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் முறையாக வெற்றியைப் பெற்று நெதர்லாந்து சரித்திரம் படைத்தது. அத்துடன் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் ஒரு சூப்பர் ஓவரில் அதிகபட்ச ரன்கள் (30) அடித்த அணி என்ற உலக சாதனையும் நெதர்லாந்து படைத்தது. அதை தனி ஒருவனாக அடித்து உலக சாதனை படைத்த வேன் பீக் 2 விக்கெட்டுகளையும் சாய்த்து சூப்பர்மேனாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். மேலும் 2020இல் பாகிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாப்வேயை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் சூப்பர் ஓவரில் வென்ற அணி என்ற வரலாற்றையும் நெதர்லாந்து படைத்தது.

Advertisement