- Advertisement -
இந்திய கிரிக்கெட்

32 ரன்ஸ்.. 12க்கு 1.. வேதனையை உடைத்த இலங்கை.. அஜந்தா மெண்டிஸ்க்கு பின் இந்தியாவை ஓடவிட்ட ஃஜெப்ரி.. அபார சாதனை

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. அத்தொடரின் முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்த நிலையில் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு முதல் பந்திலேயே சிராஜ் வேகத்தில் நிசாங்கா டக் அவுட்டானார்.

இருப்பினும் இரண்டாவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் அமைத்த பெர்னாண்டோவை 40 ரன்களுக்கு அவுட்டாக்கிய வாஷிங்டன் சுந்தர் மறுபுறம் சவாலை கொடுத்த குசால் மெண்டிசையும் 30 ரன்களில் காலி செய்தார். ஆனால் மிடில் ஆர்டரில் சமரவிக்கிரமா 14, கேப்டன் அசலங்கா 25, லியனகே 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 136/6 என இலங்கை தடுமாறியது.

- Advertisement -

இந்தியா தோல்வி:
அப்போது அசத்தலாக விளையாடிய வெல்லலாகே 39 ரன்களும் கமிண்டு மெண்டிஸ் 40 ரன்கள் குவித்து கை கொடுத்தனர். இறுதியில் அகிலா தனஞ்செயா 15 ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் இலங்கை 240/9 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் 3, அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 241 ரன்களை இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான துவக்கத்தை கொடுத்தார். ஆனால் 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 64 (44) ரன்களில் அவரை அவுட்டாக்கிய ஜெஃப்ரி வேண்டர்சே எதிர்ப்புறம் திணறிக் கொண்டிருந்த துணை கேப்டன் சுப்மன் கில்லை 35 (44) ரன்களில் காலி செய்தார். அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த சிவம் துபேவை டக் அவுட்டாக்கி மறுபுறம் நங்கூரத்தை போட முயற்சித்த விராட் கோலியையும் 14 ரன்களில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அப்போதும் நிறுத்தாத அவர் அதற்கடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 7, கேஎல் ராகுலை 0 ரன்களில் அவுட்டாக்கி தெறிக்க விட்டார். அதனால் 147/6 என தடுமாறிய இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் போராடிய அக்சர் பட்டேல் 43, வாஷிங்டன் சுந்தர் 15 ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில் 42.2 ஓவரில் இந்தியாவை 208 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இலங்கை 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அதனால் டி20 தொடரில் சந்தித்த தொடர் தோல்விகளுக்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த இலங்கை 1 – 0* (3) கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கடந்த 12 போட்டிகளில் இந்தியாவிடம் தொடர்ந்து (11 தோல்வி, 1 டை) சந்தித்த தோல்விகளை உடைத்துள்ள இலங்கை வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தான் யார் என்பதை நிரூபித்த ரோஹித் சர்மா – நடந்தது என்ன?

இந்த வெற்றிக்கு 26 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜெஃப்ரி வேண்டர்சே ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக சிறந்த பந்து வீச்சை 3வது ஸ்பின்னர் என்ற சாதனையை படைத்துள்ளார். முதல் 2 இடங்களில் முத்தையா முரளிதரன் (7/30), அஜந்தா மெண்டிஸ் (6/13) உள்ளனர்.

- Advertisement -