விராட் கோலியின் கடைசி ஓவர் சர்ச்சைக்கு தலைசிறந்த அம்பயர் சைமன் டௌபல் கூறுவது என்ன?

Simon Taufel Virat Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற பரம எதிரிகள் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டியில் எதிர்பாராத த்ரில்லர் திருப்பங்களும் சர்ச்சைகளும் அனல் பறந்தது என்றே கூறலாம். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்தும் போது ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது விராட் கோலியுடன் இணைந்து நங்கூரத்தை போட்ட ஹர்திக் பாண்டியா 113 ரன்கள் பார்ட்னர்ஷி அமைத்து மூழ்கிய இந்தியாவை தூக்கி நிறுத்தி 40 (37) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் போராடி ஆட்டமிழந்தார்.

அதனால் ஏற்பட்ட பரபரப்பில் தினேஷ் கார்த்திக் பொறுப்பின்றி ஸ்டம்பிங் ஆகி சென்றதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அடுத்ததாக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஷ்வின் அதே ஒயிட் வலையில் சிக்காமல் கடைசி பந்தை லாவகமாக தூக்கி அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதனால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலக கோப்பையில் முதல் முறையாக சந்தித்த வரலாற்று தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா பாகிஸ்தானை பழி தீர்த்துள்ளது. இந்த வெற்றிக்கு சூப்பர்மேனை போல் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்கள் குவித்து காப்பாற்றிய விராட் கோலி சந்தேகமின்றி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

கொக்கரிக்கும் பாகிஸ்தான்:
முன்னதாக அப்போட்டியில் முகமது நவாஸ் வீசிய கடைசி ஓவரில் இடுப்பளவு வந்த ஒரு பந்தை சிக்ஸர் அடித்த விராட் கோலி நோ-பால் கேட்டதற்காக பணத்தை வாங்கிக் கொண்டு நடுவர் நோ-பால் கொடுத்ததாக பாகிஸ்தான் ரசிகர்கள் முன்னாள் வீரர்களும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் அந்த சமயத்தில் விராட் கோலியின் பின்னங்கால் வெள்ளை கோட்டில் இருந்ததால் அது நோ-பால் தான் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ரசிகர்கள் ஆதாரத்துடன் பதிலடி கொடுத்தனர். அந்த சர்ச்சையை காட்டிலும் அதே நோ-பால் பந்து மீண்டும் வீசப்பட்ட போது அதை தவற விட்டு விராட் கோலி கிளீன் போல்டானார். ஆனால் அது நோ-பால் என்பதால் சாதுரியமாக செயல்பட்ட விராட் கோலி – தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்ந்து 3 முக்கிய ரன்களை எடுத்தனர்.

ஆனால் அந்த பந்து விராட் கோலியின் பேட்டில் படாமல் ஸ்டம்ப்பில் பட்டதால் அது டெட் பால் என்றும் அதற்காக 3 ரன்களை நடுவர்கள் வழங்கியிருக்கக் கூடாது என்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றுமொரு புயலைக் கிளப்பியுள்ளனர். ஆனால் அந்த பந்து நோ-பால் என்ற நிலையில் பேட்டில் பட்டால் அந்த ரன்கள் பேட்ஸ்மேனுக்கு என்று தெரிவிக்கும் பிரபல முன்னாள் அம்பயர் சைமன் டௌபல் அதே பந்து உடலில் பட்டால் லெக் பைஸ் என்றும் ஸ்டம்பில் பட்டதால் பைஸ் என்றும் கூறியுள்ளார். அதனால் அந்த இடத்தில் நடுவர்கள் விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“மெல்போர்ன் நகரில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் இறுதியில் என்னிடம் நிறைய பேர் ஏன் விராட் கோலி ஃபிரீ ஹிட் பந்தில் போல்ட்டாகியும் இந்தியாவுக்கு பைஸ் ரன்கள் வழங்கப்பட்டது என்று கேட்கின்றனர். அந்த சமயத்தில் ஸ்டம்ப்பில் பட்ட பந்து தேர்ட் மேன் திசை நோக்கி சென்ற போது இந்திய வீரர்கள் 3 ரன்கள் எடுத்த பின் அதை நடுவர்கள் பைஸ் என சிக்னல் செய்து சரியான முடிவை எடுத்தனர்.

ஏனெனில் ஃபிரீ ஹிட் பந்தில் பந்தை எதிர்கொள்பவர் போல்ட் முறையில் அவுட்டாக முடியாது. ஆனால் ஸ்டம்ப்பில் பட்ட அந்த பந்து டெட் பால் கிடையாது. அதே சமயம் அந்த பந்து விதிமுறைக்கு உட்பட்டு விளையாடப்பட்டது என்பதால் அதற்காக வழங்கப்பட்ட பைஸ் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளக்கூடியது” என்று கூறினார்.

- Advertisement -

வரலாற்றில் 99.99% நேர்மையான முடிவுகளை கொடுத்து தொடர்ச்சியாக 4 வருடம் ஐசிசி சிறந்த நடுவர் விருதை வென்ற சைமன் டௌபல் உலகிலேயே மிகச்சிறந்த நடுவராக போற்றப்படுகிறார்.

இதையும் படிங்க : SA vs ZIM : அதிரடியில் மிரட்டிய டீ காக் 3 உலக சாதனை – ஆனால் குறுக்கே வந்த மழை, 1992 முதல் தொடரும் சோகம்

அதனாலேயே தற்போது வருங்கால நடுவர்களுக்கு விதிமுறைகளை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக துபாயில் உள்ள ஐசிசி அகடமியில் பணியாற்றி வரும் அவரே இந்த இடத்தில் உண்மையான விதிமுறையை குறிப்பிட்டு பாகிஸ்தான் ரசிகர்களின் மற்றுமொரு உருட்டலை முடிவு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement