SA vs ZIM : அதிரடியில் மிரட்டிய டீ காக் 3 உலக சாதனை – ஆனால் குறுக்கே வந்த மழை, 1992 முதல் தொடரும் சோகம்

SA vs ZIM Quinton De Kock
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி தினத்தன்று நடைபெற்ற 2 போட்டிகளில் முதல் போட்டியில் நெதர்லாந்தை 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வங்கதேசம் வென்றது. ஆனால் ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2வது போட்டி தான் ரசிகர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றது. ஆம் ஹோபார்ட் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் ஜோராக வந்த மழை கொட்டித் தீர்த்தது. இருப்பினும் ஒரு மணி நேரத்திற்குப் பின் விலகிச் சென்றதால் தலா 9 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 9 ஓவர்களில் 79/5 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு சகப்வா 8, கேப்டன் எர்வின் 2, சீன் வில்லியம்ஸ் 1, சிகந்தர் ராசா 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக மாதவேர் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 35* (18) ரன்களும் சும்பா 18 (20) ரன்களும் குவித்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 80 ரன்களை துரத்த காத்திருந்த தென் ஆப்பிரிக்காவை மீண்டும் தடுத்து நிறுத்திய மழை சுமார் அரை மணி நேரம் விளையாடி விட்டு சென்றது.

- Advertisement -

மின்னல் டீ காக்:
அதனால் மீண்டும் 7 ஓவர்களாக குறைக்கப்பட்டு தென்னாப்பிரிக்கா 64 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற புதிய இலக்கு டக் வொர்த் லீவிஸ் முறைப்படி உருவாக்கப்பட்டது. அதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு ஒருபுறம் சுமாரான பார்மில் இருக்கும் கேப்டன் தெம்பா பவுமா பெயருக்காக கம்பெனி கொடுக்கும் வகையில் வெறும் 2* (2) ரன்களை எடுத்தார். ஆனால் மறுபுறம் எரிமலையாக வெடித்த நட்சத்திர தொடக்க வீரர் குயின்டன் டி காக் மின்னலைப் போல் ஜிம்பாப்வே பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கினார்.

குறிப்பாக முதல் ஓவரில் 23 ரன்களை குவித்த அவர் 2வது ஓவரில் 39 ரன்களையும் 3வது ஓவரில் 47 ரன்களையும் எட்டினார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை அவர் படைத்தார். அந்தப் பட்டியல்:
1. குயின்டன் டி காக் : 23, ஜிம்பாப்வேக்கு எதிராக, 2022*
2. டேவிட் வார்னர் : 22, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2010

- Advertisement -

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் 2 ஓவர்கள் முடிவில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார். அந்தப் பட்டியல்:
1. குயின்டன் டி காக் : 39, ஜிம்பாப்வேக்கு எதிராக, 2022*
2. டேவிட் வார்னர் : 33, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2010

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் 3 ஓவர்களின் முடிவில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனையும் (47 ரன்கள்) அவரே படைத்தார். அவரது மிரட்டலான பேட்டிங்கால் 3 ஓவரிலேயே 51/0 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா வெற்றியை அசால்ட்டாக நெருங்கிய போது “குறுக்கே இந்த கௌஷிக் வந்தால் என்பது போல்” மீண்டும் வந்து கொட்டி தீர்த்த மழை போட்டியை மொத்தமாக ரத்து செய்ய வைத்தது. ஆனால் இன்னும் 5 – 10 நிமிடங்கள் மழை வராமல் இருந்திருந்தால் கூட குயின்டன் டி காக் அடித்த வேகத்துக்கு தென் ஆப்பிரிக்கா நிச்சயம் வென்றிருக்கும் அல்லது இன்னும் 5 – 10 நிமிடங்கள் கழித்து மழை வந்திருந்தால் கூட டக் வொர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே தேவையான ரன்கள் எடுத்திருந்தால் வென்றிருக்கும்.

- Advertisement -

ஆனால் அந்த இரண்டையுமே கெடுத்த மழை இறுதியில் போட்டியை ரத்து செய்ய வைத்ததால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டது தென் ஆப்பிரிக்க ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் கடந்த 1992ஆம் ஆண்டு இதே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பையில் இதே போல் ஒரு முக்கிய போட்டியில் வெற்றியை நெருங்கிய போது மழை குறுக்கிட்டதால் ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற பரிதாப நிலையில் தென் ஆப்பிரிக்கா தோற்றது.

இதையும் படிங்க : அவரு இப்படியே ஆடுனா நிச்சயம் இந்திய அணிக்கு தான் கப். அதுல சந்தேகமே இல்ல – இன்சமாம் உல் ஹக்

2003ஆம் ஆண்டிலும் அதே நிலைமை ஏற்பட்டது இறுதியில் அது நாக்-அவுட் சுற்றுக்கு செல்ல விடாமல் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி தோல்வியை கொடுத்தது. தற்போதும் ஆரம்பத்திலேயே அதேபோல் மழை வந்து கெடுத்துள்ளதால் எங்களுக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement