
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் 3 – 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 4வது போட்டி மூடுபனியால் கைவிடப்பட்டதால் தொடரை சமன் செய்ய தென்னாப்பிரிக்கா கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. ஆனால் அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 232 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக திலக் வர்மா 73, ஹர்டிக் பாண்டியா 63 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்காவை சிறப்பாக பந்து வீசிய இந்தியா 201/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 65 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 2, வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அதனால் 30 ரன்கள் வித்யாசத்தில் வென்ற இந்திய அணிக்கு 63 ரன்களையும் 1 விக்கெட்டையும் எடுத்து முக்கிய பங்காற்றிய பாண்டியா ஆட்டநாயகன் விருது வென்றார். தொடர் முழுவதும் அசத்திய வருண் சக்கரவர்த்தி தொடர்நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இத்தொடரில் வருண், ஜஸ்ப்ரித் பும்ராவை காட்டிலும் ஹர்திக் பாண்டியா தான் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு வித்தியாசமாக இருந்ததாக தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய போட்டிகளிலும் அதிரடியாக விளையாடிய பாண்டியா இத்தொடர் முழுவதும் ஆல் ரவுண்டராக சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்காவின் தோல்விக்கு காரணமானதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சுக்ரி பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ராவிடம் இருந்து எதையும் எடுக்கவில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா தான் இரு அணிகளின் வெற்றிக்கு இடையேயான வித்தியாசமாக இருந்தார் என்று நினைக்கிறேன்”
“இன்றைய போட்டியில் அவருடைய ஆட்டமே வெற்றி தோல்விக்கான வித்தியாசமாக இருந்தது. முதல் போட்டியிலும் அவர் அதிரடியாக விளையாடினார் என்று நினைக்கிறேன். அன்றைய நாளில் நாங்கள் தடுமாறிய போது அவர் களத்திற்கு வந்து ஆட்டத்தை மாற்றினார். அதனாலேயே டி20 கிரிக்கெட்டில் அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்கிறார் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: கேமராமேனை காயமாக்கிய சிக்ஸ்.. நெகிழ்ச்சியான செயலை செய்த பாண்டியா.. கடவுள் துணை பற்றி பேட்டி
“எனவே இத்தொடரில் அவருடைய செயல்திறன் சிறந்தவற்றில் மேலே இருக்கும். தொடர்நாயகன் என்றது யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தொடர்நாயகனாக பாண்டியா இல்லாமல் போனால் அது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில் அவர் தான் இத்தொடரில் இரு அணிகளின் வித்தியாசமாக இருந்தார்” என்று கூறினார். மொத்தத்தில் இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் தோல்வியைப் பரிசளித்த தென்னாப்பிரிக்காவுக்கு ஒருநாள் மாற்றும் டி20 தொடரை வென்று இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.