
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள வேளையில் நான்காவது போட்டியானது நாளை ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்க இருக்கிறது.
இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முன்னாள் இங்கிலாந்து வீரரான கிரஹாம் கூச்சின் 35 வருட சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் இருக்கிறார். அதனை அவர் இந்த போட்டியிலேயே நிகழ்த்தும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் அதிகரிக்கும் என்பதனால் அவரது ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
அந்தவகையில் இந்த தொடரில் இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள சுப்மன் கில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி 607 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் கிரகாம் கூச்சின் 35 சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக இங்கிலாந்து முன்னாள் வீரரான கிரஹாம் கூச் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 1990-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் 752 ரன்களை அவர் குவித்தார். அதுவே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது 607 ரன்களுடன் இருக்கும் சுப்மன் கில்லுக்கு இன்னும் இந்த தொடரில் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள வேளையில் மேலும் அவர் 146 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் 753 ரன்கள் குவித்து அவரது சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனை அவர் இந்த நான்காவது போட்டியிலேயே செய்து வரலாறு படைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பே ரிஷப் பண்ட் தான்.. அதுக்கு காரணம் இருக்கு – சுரேஷ் ரெய்னா கருத்து
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த வேளையில் அவரது இடத்திற்கு வந்துள்ள சுப்மன் கில் முதல் 3 போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.