- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2வது போட்டியிலேயே.. 25 வயதில் 2 இரட்டை சதம்.. கவாஸ்கரை சமன் செய்த கில்.. புதிய உலக சாதனை

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் துவங்கிய 2
வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அபாரமாக விளையாடி 587 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடும் இங்கிலாந்து 2வது நாள் முடிவில் 77/3 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

2வது போட்டியிலேயே இரட்டை சதம்:

முன்னதாக ரோஹித் சர்மா ஓய்வுக்கு பின் சுப்மன் கில் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த காலங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் அவர் பெரிய ரன்கள் குவித்ததில்லை. எனவே வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்ற அவரை கேப்டனாக நியமிக்கலாமா? என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதத்தை அடித்த கில் 2வது போட்டியில் இரட்டை சதத்தை அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். கேப்டனாக இதுவரை விளையாடிய 3 இன்னிங்ஸில் அவர் 118, 8, 269 ரன்களை அடித்துள்ளார். குறிப்பாக கேப்டனாக பொறுப்பேற்ற 2வது போட்டியின் 3வது இன்னிங்ஸிலேயே கில் இரட்டை சதத்தை அடித்துள்ளார்.

- Advertisement -

25 வயதில் உலக சாதனை:

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த (3) இன்னிங்ஸில் இரட்டை சத்தத்தை அடித்த இந்திய கேப்டன் என்ற சுனில் கவாஸ்கர் சாதனையை கில் சமன் செய்துள்ளார். இதற்கு முன் 1978ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற கவாஸ்கரும் தனது 3வது இன்னிங்ஸில் வான்கடே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 205 ரன்கள் அடித்தார். அந்த சாதனையை சமன் செய்துள்ள கில் ஏற்கனவே 2023ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இரட்டை சதத்தை (208) அடித்தார்.

இதையும் படிங்க: இதை நாங்க முதல் போட்டியிலேயே பண்ணியிருந்தா முடிவு வித்தியாசமா இருந்திருக்கும் – சுப்மன் கில் பேட்டி

இதன் வாயிலாக 25 வயதில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை சுப்மன் கில் நிகழ்த்தியுள்ளார். அவரை தவிர்த்து வேறு யாரும் 25 வயதில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை அடித்ததில்லை. இது போக தென்னாப்பிரிக்கா கிரேம் ஸ்மித்துக்கு (22 வருடம் 175 நாட்கள்) பின் இங்கிலாந்தில் 2வது இளம் வயதில் (25 வருடம் 298 நாட்கள்) இரட்டை சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையையும் கில் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -