
மும்பையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நவம்பர் ஒன்றாம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 235 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 82, வில் எங் 71 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 4, ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 18 ரன்னில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வால் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த விராட் கோலி 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 86-4 என இந்தியா தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் – சுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள்.
அதில் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 36 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு சரிவை சரி செய்தார். தொடர்ந்து அசத்தலாக விளையாடிய அவர் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 60 (59) ரன்கள் விளாசி அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த ஜடேஜா 14, சர்பராஸ் கான் 0 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.
ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த சுப்மன் கில் அரை சதம் கடந்து இந்தியாவை காப்பாற்றினார். அதனால் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 90 ரன்களில் அஜஸ் பட்டேல் சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இதன் வாயிலாக மும்பை வான்கடே மைதானத்தில் 13 வருடம் கழித்து 90களில் அவுட்டான 2வது இந்திய வீரராக சுப்மன் கில் பரிதாபமான சாதனையும் படைத்தார்.
இதற்கு முன் 2000, 2011 ஆண்டுகளில் சச்சின் தம்முடைய சொந்த ஊரான மும்பையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 90களில் அவுட்டாகியிருந்தார். அந்த வகையில் பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில் ஆட்டத்தால் இந்தியா 235 ரன்கள் கடந்துள்ளது. அதன் காரணமாக இப்போட்டியில் இந்தியா முன்னிலையில் பெற்று வெற்றிக்கு போராடி வருகிறது.
இதையும் படிங்க: எனக்கு என்ன நடக்குதுனே தெரியல.. விராட் கோலி ஆட்டமிழந்த விதம் குறித்து – ரவி சாஸ்திரி விமர்சனம்
களத்தில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இன்னும் முன்னிலையை அதிகரிக்க போராடி வருகிறார்கள். குறிப்பாக பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருக்கிறது. அதனால் போட்டியில் எப்படியாவது 50 ரன்களை முன்னிலையாக பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.