
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில்லின் பேட்டிங் ஃபார்ம் மிக மோசமாக இருந்து வருகிறது. முதல் போட்டியில் 4 ரன்கள் மட்டுமே அடித்த அவர் இரண்டாவது போட்டியின் போது டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் மூன்றாவது போட்டியிலாவது அவர் பெரிய ரன் குவிப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மூன்றாவது போட்டியிலும் 30 ரன்கள் கூட எட்ட முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக சுப்மன் கில் மீது பல்வேறு தரப்பிலும் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் அவர் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை விளையாட வைக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வந்தன.
ஆனாலும் சுப்மன் கில்லுக்கு ஆதரவு கொடுத்து இந்திய நிர்வாகம் தொடர்ந்து அவரை பாதுகாத்து வந்தது. ஆனால் இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் நான்காவது டி20 போட்டிக்கு முன்னதாக அவர் இந்த டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் சுப்மன் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்று தெரிகிறது. இப்படி இந்த டி20 தொடரின் கடைசி நேரத்தில் சுப்மன் கில் விலக காரணம் யாதெனில் :
பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் மோசமாக விளையாடிய அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வேளையில் திடீரென காயத்தை காரணம் காட்டி அவர் இந்திய அணியில் இருந்து விலகியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.. என்ன நடந்தது? – விவரம் இதோ
உண்மையிலேயே அவர் காயத்தால் தான் வெளியேறி உள்ளாரா? அல்லது ஃபார்ம் அவுட் காரணமாக தானாகவே முன்வந்து காயத்தை ஒரு காரணமாக காட்டி அணியில் இருந்து விலகியுள்ளாரா என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.