வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் சுப்மன் கில் உச்சகட்ட ஃபார்மில் இருந்தும் முதல் 3 போட்டிகளில் அடித்து நொறுக்குவதற்கு பதிலாக திண்டாட்டமாக செயல்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் 2018 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று உள்ளூர் அளவிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார்.
அதை தொடர்ந்து 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் கோப்பையை வெல்லும் அளவுக்கு அசத்திய அவர் அப்போதிலிருந்து இந்தியாவுக்காக கிடைத்த நிலையான வாய்ப்பை பயன்படுத்தி 3 வகையான கிரிக்கெட்டிலும் சதங்கள் அடித்து தன்னை நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தினார். அதே வேகத்தில் ஐபிஎல் 2023 தொடரிலும் ஆரஞ்சு தொப்பியை வென்று மிரட்டிய அவர் முக்கியமான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சுமாராக செயல்பட்டு இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.
என்னன்னு புரியல:
அதே போல பலவீனமான அணியாக இருந்தாலும் சவாலான மைதானங்களை கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடிய 6 போட்டிகளில் 1 அரை சதம் மட்டுமே அடித்து தடுமாறிய அவர் முதல் 3 டி20 போட்டிகளில் 3, 7, 6 என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதை விட டி20 கிரிக்கெட்டில் தம்முடைய கேரியரில் ஆரம்பம் முதலே தடுமாறிய அவர் 2022 பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக தமக்கு மிகவும் பிடித்த ஃபிளாட்டான பிட்ச்சை கொண்டிருக்கும் அகமதாபாத் மைதானத்தில் 126 (63) ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.
ஆனாலும் அகமதாபாத்துக்கு வெளியே களமிறங்கிய 8 டி20 போட்டிகளில் 92 ரன்கள் மட்டுமே எடுத்து திணறும் அவர் சவாலான பிட்ச்களில் தடுமாறுவதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர். அந்த நிலைமையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருக்கும் லாடர்ஹில் கிரிக்கெட் மைதானத்தில் ஃபிளாட்டான பிட்ச்சில் நடைபெற்ற 4வது டி20 போட்டியில் களமிறங்கிய அவர் ரசிகர்களின் கூற்றை உண்மையாகும் வகையில் அப்படியே நேர்மாறாக அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 5 சிக்சருடன் 77 (47) ரன்கள் குவித்து அசத்தினார்.
அதனால் சவாலான மைதானங்களில் தடுமாறும் கில் ஃபிளாட்டான பிட்ச்சில் புலியாக சீறிப்பாய்வதாக 4வது போட்டியின் வெற்றியில் பங்காற்றியும் சில ரசிகர்கள் கலாய்த்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இத்தொடரின் முதல் 3 போட்டிகளில் தம்முடைய பேட்டிங்கில் டெக்னிக் அளவில் எந்த தவறுகள் இல்லாத போதும் ஏன் அடிக்க முடியவில்லை என்று தெரியவில்லை என சுப்மன் கில் கூறியுள்ளார். ஆனால் லாடர்ஹில் மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருந்ததால் தம்மால் எளிதாக ரன்கள் அடிக்க முடிந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பிசிசிஐ இணையத்தில் பேசியது பின்வருமாறு.
“முதல் 3 போட்டிகளில் நான் 10 ரன்களை கூட அடிக்கவில்லை. ஆனால் இன்றைய போட்டியின் பிட்ச் சற்று சிறப்பாக இருந்ததால் நான் அதை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதன் காரணமாக எனக்கு கிடைத்த நல்ல துவக்கத்தை பெரிய அளவில் ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். டி20 போட்டிகள் இப்படித்தான் நடக்கும். அதாவது 3 – 4 போட்டிகளில் நீங்கள் நல்ல ஷாட்டுகள் அடித்தாலும் அது ஃபீல்டர் கையில் சென்று விழும். இருப்பினும் நீங்கள் அதை பார்த்து அதிகமாக சிந்திக்காமல் விரைவாக ரன்கள் சேர்க்க வேண்டும்”
இதையும் படிங்க:வீடியோ : உயிர் தப்பி உறைந்து போன நட்சத்திர வீரர், ஆசிய கோப்பை நடைபெறும் மைதானத்தில் மீண்டும் புகுந்த பாம்பு – ரசிகர்கள் கவலை
“அப்போது உங்களுடைய அடிப்படையை பின்பற்றி விளையாட வேண்டும். குறிப்பாக நீங்கள் தொடர்ச்சியாக ரன்கள் அடித்த போது என்ன டெம்ப்ளேட்டை பயன்படுத்தினீர்கள் என்பதை பார்க்க வேண்டும். அத்துடன் என்ன தவறு செய்தீர்கள் என்பதையும் கண்டறிய வேண்டும். ஆனாலும் நான் அந்த 3 போட்டிகளில் எந்த தவறும் செய்யவில்லை என்றே கருதினேன். ஆனாலும் அந்த போட்டிகளில் என்னுடைய துவக்கத்தை பெரிதாக மாற்ற முடியவில்லை” என்று கூறினார். இதைப் பார்க்கும் போது ரசிகர்கள் கிண்டலடிப்பதை இவரது வாயாலேயே ஒப்புக்கொள்வது போல் இருப்பது குறிப்பிடத்தக்கது.