
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடியது. அந்தத் தொடரில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வென்ற பெரும்பாலான இந்திய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் 2024 ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே மண்ணில் விளையாடியது.
அதில் முதல் போட்டியில் 116 ரன்களை அடிக்க முடியாமல் இந்திய அணி அவமானத் தோல்வியை பதிவு செய்தது. இருப்பினும் அங்கிருந்து சுதாரித்து விளையாடிய இந்தியா அதற்கடுத்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்டது. அதனால் 4 – 1 (5) என்ற கணக்கில் முதன்மை வீரர்கள் இல்லாமலேயே அத்தொடரை வென்ற இந்தியா தங்களை சாம்பியன் என்பதைக் காட்டியுள்ளது.
ரோஹித் வழியில்:
முன்னதாக இந்த தொடரில் சுப்மன் கில் முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஐபிஎல் 2024 தொடரில் அவருடைய தலைமையில் விளையாடிய குஜராத் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இருப்பினும் இந்தியாவுக்காக தலைமை தாங்கிய முதல் தொடரிலேயே கேப்டனாக அவர் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மாவை பின்பற்றி தாம் இந்திய அணியை வழி நடத்தி வெற்றி பெற்றதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அத்துடன் கேப்டனாக பொறுப்பேற்ற பின்பே தம்மிடமிருந்து சிறந்த செயல்பாடுகள் வெளிப்படுவதாகவும் அவர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் ரோகித் பாய் அல்லது மஹி பாய், விராட் பாய், ஹர்திக் பாய் ஆகிய அனைவரிடமும் இருந்து தரத்தை எடுத்துக் கொள்ளலாம்”
“அவர்கள் அனைவருமே நல்ல தரத்தை கொண்டவர்கள். இருப்பினும் ரோகித் பாய் தலைமையில் நான் அதிகமாக விளையாடியுள்ளேன். எனவே கேப்டன்ஷிப் என்று வரும் போது நான் அவரைப் பார்த்து கற்றுக்கொள்கிறேன். அவர் தலைமையில் நான் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன். கண்டிப்பாக கேப்டன்ஷிப்பை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன். உண்மையில் அது என்னுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருகிறது”
இதையும் படிங்க: அப்டின்னா அவங்க இந்தியர்கள் இல்லையா? ஏன் பாகிஸ்தானுக்கு அனுப்புனீங்க.. இந்தியாவுக்கு சல்மான் பட் கேள்வி
“ஏனெனில் அது என்னை போட்டியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வைக்கிறது. அதே சமயம் அழுத்தமும் இருக்கும். ஆனால் அதை எக்ஸ்ட்ரா அழுத்தம் என்று சொல்ல மாட்டேன். பேட்ஸ்மேனாக இருக்கும் போது கூட நீங்கள் நன்றாக செயல்படவில்லையெனில் அழுத்தம் ஏற்படும். கேப்டனாக இருக்கும் போது பல்வேறு உணர்வுகள் வெளிப்படும். அதில் அழுத்தமும் ஒன்றாகும். அதைத் தாண்டி நீங்கள் வெற்றி பெறும் போது கிடைக்கும் திருப்தி அற்புதமானது” என்று கூறினார்.